Advertisement

Main Ad

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட்


(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடும்போது,

கடந்த ஒரு மாத காலம் நோன்பிருந்து நாங்கள் பல பயிற்சிகளைப் பெற்றோம். நோன்பு முடிந்தும் மீண்டும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டு எங்களை இறைவனிடமிருந்து துாரமாக்காமல் எங்களுடைய வணக்க வழிபாடுகளிலும் மார்க்க நெறிமுறைகளிலும் முடிந்தளவு பேணுதலைப் பின்பற்றுவதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ஒரு பிரதான தேர்தல் காலத்தில் நாம் நோன்பிருந்து இந்த பெருநாளை கொண்டாடு கின்றோம். அரசியலில் ஒரு மாயைத் தோற்றப்பாடு இருக்கின்றது. அதுதான் பொய் பேசுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு அவ்விடயத்தில் சலுகை உண்டு. ஏமாற்றுவது இஸ்லாத்தில் விலக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றவர்களை ஏமாற்றுவதற்கு இஸ்லாத்தில் விதி விலக்களிக்கப்பட்டுள்ளது. உள்ளொன்றும் புறம் ஒன்றுமாக நயவஞ்சகத் தனமாக பேசுவதும் செயற்படுவதும் இஸ்லாம் வெறுக்கின்ற ஒரு விடயமாகும். ஆனால் அரசியல்வாதிகள் அவ்வாறு செய்ற்பாட்டால் மறுமைக் கேள்விகணக்கிலிருந்து அவர்கள் விலக்களிக்கப்படுவார்கள். சுயநலத்தையும் அழுக்கையும் மனதில் வைத்துக்கொண்டு வெளியில் மேடைகளிலும், ஊடகங்களிலும் தன்னைவிட உத்தமர் இல்லை என்று பேசுவதற்கு இஸ்லாத்தில் அரசியல்வாதிகளுக்கு விசேட அனுமதியுண்டு. இவ்வாறான ஒரு மனோ நிலையைத்தான் நாம் நமது முஸ்லிம் அரசியலிலிருந்து பரவலாக காண்கின்றோம். அதற்காக இதற்கு விதி விலக்கானவர்கள் இல்லை என்று கூற வரவில்லை. ஆனால் பெரும்பான்மையானவர்கள் இவ்வாறுதான் இருக்கின்றார்கள்.

அரசியல்வாதிகளும் அரசியல் வாதிகளல்லாதவர்களும் மரணிக்கின்றபோது நம் எல்லோருக்கும் கேள்வி கணக்குகள் இருக்கின்றன என்பதை நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

நாம் எதற்காக அரசியல் அதிகாரத்தைப் பெற விரும்புகின்றோம். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு அமைச்சர் என்னை எல்லோரும் மதிப்பார்கள். என்ற பெருமையின் காரணமாகவா ? அதுதான் உண்மை என்றால் துளி அளவும் பெருமை உள்ளவன் சுவர்க்கம் புக மாட்டான் என்ற நபி மொழி இருக்கின்றது. அல்லது இந்த அதிகாரத்திலும் நான் ஒரு கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பதுதான் நோக்கமா ? அதுதான் நோக்கமென்றால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றது. சமூதாயத்தை ஏமாற்ற வேண்டிய அவசியமில்லை. இறைவன் திருமறையில் கூறுகின்றான். மனிதனையும், ஜின்களையும் தன்னை வணங்குவதற்காகவேயன்றி படைக்கவில்லை என்று, அதனுடைய பொருள் 24 மணித்தியாலமும் நான் இறைவனை வணங்குவதைத் தவிர வேறு எதனைச் செய்வதற்கும் எனக்கு உரிமையில்லை. அவ்வாறாயின் நாம் உண்ணுவதில்லையா ? குடிப்பதில்லையா ?  ஏனைய விடயங்களைப் பார்ப்பதில்லையா ? என்ற கேள்வி எழுகின்றது.

ஆம் நிச்சயமாக நாம் இறைவனுக்காக என்று துாய்மையான எண்ணத்தோடு செய்கின்றபொழுது நாம் நடப்பது, குடிப்பது, நமது எந்த வகையான செயற்பாடுகளும் வணக்கமாகும். அரசியலும் வணக்கமாகும். எனவே அரசியலை அல்லாஹ்வுக்காக அவனுக்கு வழிப்பட்ட சமூகத்திற்காக நாம் செய்கின்றபொழுது நாம் அரசியலில் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வணக்கமாகும். எனவே அவ்வாறான துாய்மையான அரசியலில் எவ்வாறு பொய்யும், நயவஞ்சகத் தனமும், ஏமாற்று வார்த்தைகளும் வர முடியும். அவ்வாறு வருமாக இருந்தால் அவ்வாறான அரசியல் நேரடியான  நரகத்திற்கான அனுமதிச் சீட்டாக அமைந்து விடாதா ? நஊதுபில்லாஹ் இறைவன் நம்மைப் பாதுகாக்க வேண்டும். ” அரசியலில் பொய் சொல்வது, ஏமாற்றுவது, அத்தனை தில்லு முல்லுகளையும் செய்வது சகஜமப்பா ” என்று கூறுகின்ற எத்தனை சகோதரர்களை நாம் கண்டிருக்கின்றோம். தில்லுமுல்லுகளும், பொய் புறட்டுக்களும் அரசியலில் சகஜமென்றால் மேடைகளிலும், ஊடகங்களிலும் மாத்திரம் ஏன் உத்தமர்களாக வேடம் போடுகின்றோம். அவ்வாறாயின் நாம் பிடித்த நோன்புக்கு என்ன பொருள். நமது தராவீஹ் மற்றும் ஏனைய அமல்களுக்கு என்ன பொருள். எல்லாவற்றிற்கும் மேல் நாம் சொன் கலிமாவிற்கு என்ன அர்த்தம்.

எனவே இந்த றமழானில் பெற்ற பயிற்சிகளைக் கொண்டு நாம் நாமாக இறைவன் காட்டிய வழியில் நடக்க முயற்சிப்போம். மாறாக நாம் ஒருவராகவும் மக்களுக்கு முன்னால் நம்மை நாம் இல்லாத இன்னும் ஒருவராகவும் காட்ட முயற்சிக்கின்ற பாவத்திலிருந்து தவிர்ந்து கொள்வோம். எல்லாம் வல்ல அல்லாஹ் என்னுடையதும, அனைத்து முஸ்லிம்களுடையதும் பாவங்களை மன்னித்து இந்த றமழானில் அவன் நரக விடுதலை கொடுத்த இலட்சோப இலட்சம் மக்களுடன் உங்களையும், என்னையும் சேர்த்துக் கொள்வானாக ஆமீன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.