அபு அலா –
நிந்தவூர் சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் 23 ஆவது வருட நிறைவையொட்டி நிந்தவூரில் இரண்டாவதுமுறையாக நடாத்தும் மாபெரும் மின்னொளி உதைபந்தாட்ட நேற்றைய (11) போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்றிரவு (11) இடம்பெற்ற போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகமும், அக்கரைப்பற்று இலவன் விளையாட்டுக் கழகமும் மோதியது.
மிக விறுவிறுப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தின் வீரர் கே.எம்.அக்ரம் அக்கரைப்பற்று இலவன் விளையாட்டுக் கழகத்துக்கு ஒரு கோளினை போட்டு 1 – 0 என்ற அடிப்படையில் சோபர் விளையாட்டுக்கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டிக்கு கிழக்குமாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மத்திய குழுவின் தலைவருமான ஏ.எஸ்எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும், சோண்டஸ் விளையாட்டுக் கழகத்தின்தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.தாஜுதீன்,அட்டாளைச்சேனை பிரதேச அனைத்து விளையாட்டுக் கழகங்களின் தலைவர் ஹம்ஸா சனூஸ், சிரேஷ்டஊடகவியலாளர் எம்.சஹாப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






