Advertisement

Main Ad

அரசின் அழைப்பை ஏற்று இலங்கை வருகிறார் ஒபாமா : கிரியெல்ல

(ப.பன்னீர்செல்வம்)
 
அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா இலங்கை வருகின்றார், இதற்கான அரசாங்கத்தின் அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரென தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கத்தின் நல்லாட்சியை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



பிட்டகோட்டையிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 


அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணவில்லையென்றும், பல நாடுகள் அரசாங்கத்துடன் எந்த விதமான தொடர்பாடுகளையும் கொண்டிருக்கவில்லையென்றும் எதிர்க்கட்சி அரசின் மீது குற்றம் சுமத்துகிறது.

ஆனால் இக்குற்றச் சாட்டுக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது. கடந்த ஆட்சியாளர்கள்தான் சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையை தனிமைப்படுத்தியிருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் வெளிநாடுகளுடனான நட்புறவு மேம்பட்டுள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி  பராக் ஒபாமா இவ்வருட இறுதியில் இலங்கை வருகின்றார். இதற்கான இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஒபாமா ஏற்றுக் கொண்டுள்ளார்.

இது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஒபாமா மட்டுமல்ல பல சர்வதேச தலைவர்கள் இலங்கை வருவதற்காக வரிசையில் நிற்கின்றனர்.

எமது அரசாங்கத்தையும் நல்லாட்சியையும் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே உலகின் மத்தியில் எமது நாடு இன்று தலை நிமிர்ந்துள்ளது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல  மேலும் தெரிவித்தார்.