Advertisement

Main Ad

வாழ்வின் ஒளி நிகழ்ச்சித் திட்டத்தில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு. -இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதி-


 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீனின் “வாழ்வின் ஒளி” வாழ்வாதார நிகழ்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூர்ப் பிரதேசத்திலிருந்து பல்கலைக் களகத்திற்குத் தெரிவான 100 மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மாணவர்களைக் கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் நேசம் அமைப்பின் தலைவர் விரிவுரையாளர் பஸீர் மாஸ்டர், சட்டத்தரணி ஆரீப் சம்சுதீனின் பிரத்தியேகச் செயலாளர் ஏ.எல்.எம்.அமீன், நிந்தவூர்ப் பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர் உட்பட ஆயிரக் கணக்கான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் உரையாற்றுகையில் “கிழக்கு மாகாண சபையில் இன்று சர்வகட்சி ஆட்சியை ஏற்படுத்தியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் நினைத்திருந்தால் ஐ.தே.க, பொ.ஜ.ஐ.மு, ஐ.ம.சு.கூ, அ.இ.ம.காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைத்திருக்க முடியும், ஆனால் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி, தேசிய அரசியலில் எதனையும் பெறாத, பல்வேறு இன்னல்களைச்சுமந்த சகோதர இனக்கட்சியான கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டுமென்று எமது தலைமை செயற்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஹசன்அலி இங்கு பேசுகையில் “ கிழக்கில் அமைகின்ற சர்வகட்சி ஆட்சியில் உருவாகும் தேசிய நீரோட்டத்தில் தமிழ் சகோதர இனத்தவர்களையும் இணைத்துக் கொள்வதில் முஸ்லிம் காங்கிரஸ் உச்சக் கட்டப் பொறுமையைக் காத்திருக்கின்றது. மு.கா. தமிழ் சகோதரர்களால் மிகமோசமாக விமர்சிக்கப்பட்டபோதெல்லாம் நாம் மிகநிதானத்தோடு பொறுமை காத்தோம். அவர்களது விமர்சனங்களுக்கு நாம் பதில் கொடுக்காமல் அவர்களையும் எம்மோடு இணைத்துக் கொள்வதில் கண்ணாயிருந்து பாடுபட்டோம். இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.