Advertisement

Main Ad

சமூகத்தில் அசிங்கத்தை அரங்கேற்றுவோருக்கு எதிராக விசேட சட்டங்களை அமுல்படுத்தி அதனூடாக இளம் சமூகத்தினரை பாதுகாப்போம் - ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார்

( ஏ.கே.எம். ஹ_சைனி )


சிறுவர், பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றி பெற்றோருக்கு தொடர்ந்தும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் இக்குற்றச் செயல்களிலிருந்து பெரும்பாலும் இளம் சமூதாயத்தினரை பாதுகாக்க முடியும் என்று கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக்கட்சி  உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்துள்ளார்.



சாய்ந்தமருது நொய்ஸ் அமைப்பின் உறுப்பினர்களுடனான விசேட கூட்டம் பொதுக்கூட்டம் நேற்று (10) மாலை அமைப்பின் சாய்ந்தமருது அலுவலகத்தில் தலைவர் எஸ்;. முபாறக் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே நபார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


மாணவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றும்போது,


சமூகத்தில் அசிங்கத்தை அரங்கேற்றுவோருக்கு  எதிராக விசேட சட்டங்களை அமுல்படுத்தி அதனூடாக இளம் சமூகத்தினரை பாதுகாக்கும் பொறுப்பு ஆளும் தரப்பினருக்கு இருக்கின்றது.


குழந்தைச் செல்வங்கள் அனைவரினதும் வாழ்விலும் கிடைக்க வேண்டிய விலைமதிக்க முடியாத சொத்துக்களாகும். இவர்களே நாட்டின் எதிர்காலத் தலைவர்களும் ஆகும். அண்மைக் காலமாக ஊடகங்களில் சிறுவர் பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றி அடிக்கடி செய்திகள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புக்களும் இடம்பெற்றுள்ளமை மன வேதனையாக உள்ளது.


சிறுவர்கள் இலகுவில் ஏமாறக்கூடியவர்கள் என்பதனை நன்கறிந்து காமுகர்கள் பரிசுப் பொருட்களையோ, தீண்பண்டங்களையோ அல்லது ஒரு தொகைப்பணத்தையோ கொடுத்து அவர்களை உளவியல் ரீதியாக அணுகி காம இச்சைகளுக்கு உட்படுத்துகின்றனர். அண்மையில் கனேவத்தை பன்னவை பிரதேசத்திலும், கல்கமுவ பிரதேசத்திலும் இரு சிறுமிகள் கப்பம் கோரும் நோக்கில் கடத்தப்பட்டனர். அதே போல் காத்தான்குடி பிரதேசத்திலும் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு நாட்டின் நாலா பாகங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதுடன் சிறுவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரும் சம்பவங்களும் நடைபெற்ற வண்ணமேயுள்ளன. இதனால் தங்களது குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் பிள்ளை வீடு வரும்வரை பெற்றோர்கள் தவிப்புடனும், தயக்கத்துடனும் இருக்கின்றனர். இந்நிலைமை தொடருமேயானால் எதிர்காலத்தில் சிறுவர்கள் கல்வி கற்பதில் பல தடைகள் ஏற்படலாம். ஆனால் கல்வி கற்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.


இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட தரப்பினர் கூடிய கவனமெடுத்து செயற்பட்டால் மாத்திரமே காமுகர்களின் அட்டகாசம் குறையும்.


அதிகமான பெற்றோர்கள் தங்களது தொழில் சார்ந்த துறையில் அதிக அக்கறை காட்டுவதும், இவ்வாறான விடயங்களில் விளிப்புணர்வின்மையும் இதற்கு ஒரு காரணமாகும். பெற்றோர்கள், பிரதேச வாசிகள், ஆசிரியர்கள் ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தங்களினது முழுப் பங்களிப்பினையும் பொலிசாருக்கும், சிறுவர் துஷ்பிரயோக உத்தியோகஸ்தர்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் வழங்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.


வெளியிடங்களில் இருந்து வந்து கூலி வேலை செய்பவர்கள். உளவியல் ரிதியாக பாதிக்கப்பட்டவர்கள், தொழிலின்றி அலைந்து திரிபவர்கள, போதைவஸ்துக்கு அடிமையானவர்கள்; ஆகியோரினாலேயே இவ்வாறான சிறுவர் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகங்கள் அனேகமாக நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


எமது எதிர்கால சந்ததியினரை இவ்வாறான காமுகர்களிடமிருந்தும் கடத்தல் காரர்களிடமிருந்தும் காப்பாற்றும் பொறுப்பு அனைவரினதும் கடமையாகும். 


இவ்வாறான ஈனச் செயல்களைப்புரிகின்ற கயவர்களுக்கு கருணை காட்டக்கூடாது. இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் இவர்களைப் போன்ற ஏனையோருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். என்றும் குறிப்பிட்டார்.