Advertisement

Main Ad

ஆசிரியர் சமூகத்தில் சரித்திரம் படைத்த அஸ்சஹீத் சரீஃப் அலி…

 அஹமட் இர்ஸாட் மொஹமட் புஹாரி

 

கல்குடாவில் பிரசித்திபெற்றிருந்த காட்டுவிதானையார் எனப்படும் மொஹம்மட் இஸ்மாயிலின் மகனான அஸ்ஸஹீத் சரீஃப் அலி ஆசிரியர் அவர்கள் கல்குடாவின் ஆசிரியர் சமூகத்தில் சரித்திரம் படைத்தவர் மட்டுமல்லாது ஓட்டமாவடி ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலையானது நிகழ்காலத்தில் ஒழுக்கத்தில் தலைநிமிர்ந்து காணப்படுகின்றது என்றால்! அஸ்சஹீத் சரீஃப் அலி அவர்களினால் அவருடைய காலத்தில் ஒழுக்க கட்டுப்பாட்டுக்கு இடப்பட்ட அத்திவாரமாகவே பார்க்கப்படுகின்றது.

ஓட்டமாவடியில் உள்ள பெரும் பாடசாலைகளான இவைகள் இரண்டும் பல சாதனைகளை எட்டிப்பிடிப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் இவருடைய நிருவாக ஆளுமையும் அவரினால் விட்டுச்செல்லப்பட்ட பக்கசார்பற்ற பாடசாலை ஒழுக்க விதிமுறைகளுமே முக்கிய காரணமாக அமைகின்ற அதே நேரத்தில்,அன்றைய காலத்தைப்போல் இன்றும் அவைகளின் பிரதிபளிப்புக்களும்,அவருடை ஈடுசெய்ய முடியாத இழப்பும் கல்குடாவில் உள்ள  பாடசாலைகளுக்கு எவராலும் ஈடுகட்ட முடியாத சரித்திரமாகவே ஒட்டுமொத்த கல்குடா சமூகத்தாலும் பார்க்கப்படுகின்றது.

பாடசாலை காலத்தில் விளையாட்டு வீரனாகவும். குறுந்தூர ஓட்டவீரனாகவும் மாவட்ட, தேசிய மட்டத்தில் பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் வரலாற்று பெருமையினை தேடிக்கொடுத்த இவர், ஓட்டமாவடி ஆண்கள் பெண்கள் பாடசாலைகளானது கலவன் பாடசாலையாக  காணப்படும் பொழுது பாடாசாலையில் நீண்ட காலமாக ஒழுக்கக்கட்டுபாட்டு ஆசிரியராக கடைமையாற்றி விளையாட்டுத் துறையில் ஓட்டமாவடி மாணவர்கள் பல சாதனைகளை மாவட்ட தேசிய மட்டத்தில் படைப்பதற்கு தனிமணிதனாக நின்று செயற்பட்ட ஆசானுமாவார். விளையாட்டானது மாணவர்களை எதிர்காலத்தில் ஒழுக்கசீலர்களாக உருவாக்கும் என்பதற்கு இவருடைய பயிற்றுவிப்பும், இவருடைய ஒழுக்கத்தினை மையமாக கொண்ட பாரபட்சமற்ற பாடசாலை நிருவாக ஆளுமையுமே முக்கிய காரணங்களாகும்.

தாராளமாக மற்றவருக்கு உதவி செய்யும் பன்பினை தன்னகத்தே வைத்துக்கொண்ட இவர் UNP கட்சியானது கல்குடாவில் செல்வாக்கு செலுத்துவதற்கும், மறைந்த கெளரவ நீதி அமைச்சர் KW.தேவநாயகம் அவர்களின் வெற்றிகளுக்கும் பெரும் பங்காற்றியவராவார். இதனால் கல்குடா சமூகத்தில் எல்லோராலும் மதிப்புக்கும் மரியதைக்குரிய மணிதராக காணப்பட்டது ஒருபுறமிருக்க, எதிர்கால கல்குடாவின் தலைமைக்கு பொருத்தமானவர் என சமூகத்தால் எதிர்வுகூறப்பட்ட நிலையில் மக்களின் உள்ளத்தை வென்றவராகவும்  காணப்பட்டார்.

இவ்வாறு மக்கள் மனதில் இடம்பிடித்து வாழ்ந்த மணிதரைத்தான் ஆயுதகுழுவானது 1989 ஆண்டு தனது மீராவோடை வீட்டில் இஸா தொழுதுவிட்டு மனைவி பிள்ளைகளுடன் உறவாடிகொண்டிருந்த வேலையிலே சிறிது கதைக்க வேண்டும் என வீதிக்கு அழைத்து நடு வீதியிலே துடிதுடிக்க அவர்களுடைய AK.47 இயந்திர துப்பாக்கியால் அவருடைய பெருமதிமிக்க உயிரை பறித்துச்சென்றனர். அவருடைய உயிரை பறித்தவர்கள் மணிதவர்கத்துக்கு சம்பந்தப்படாத அரக்கர்கள் என்றுதான் சொல்லமுடியும்., ஏன் என்றால் அன்று அவர் வீட்டில் மனைவியோடு உரையாடிக்கொண்டிருந்த வேலையில் அவருடன் இருந்தவர்களில் 8வயதுக்கும் குறைவான மூன்று பிள்ளைச் செல்வங்களும் அடங்குவார்கள். இந்த பிள்ளைகள் தந்தையின் பாசத்தையும், பாதுகாப்பையும் இளம் வயதில் பறிகொடுக்கின்றார்களே என்று சிறிதளவேனும் சிந்திக்காகத அந்த கொலைகார கும்பலை சேர்ந்தவர்கள் இவருடைய உயிரை பறித்து எதனை சாதித்து விட்டார்கள்?! ஒன்றுமே இல்லை.

இவர் செய்த குற்றம் என்ன?? சமூகத்தில் ஒழுக்கமுள்ள மணிதனாக வாழ்ந்து மக்களின் மதிப்பை பெற்றுவந்தமையும், நேர்மையினை கையில் எடுத்தமையுமே இவருடைய உயிரை துடிதுடிக்க பறித்தவர்களுக்கு இவர் செய்த துரோகமாகும். சதிகாரனுக்கெல்லாம் சதிகாரன் அல்லாஹ் என்பதையும், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற இறைவனின் தத்துவ கோட்பாடுகள் என்ன வென்று தெரியாமல் அன்று அவர்கள் AK.47 யை சரீஃப் அலி அவர்களின் நெஞ்சுக்கு நேரே நீட்டும் போது மணித இறைச்சியை புசிக்கும் அரக்கர்களாகவே அவர்கள் இருந்திருப்பார்கள் என்பதில் மாற்றுகருத்திருக்க முடியாது. காலம் பதில்சொலும் என்பதை போல் சொல்லி விட்டது நல்ல பாடத்தை அவர்களுக்கு. ஆனால் இன்றும் அஸ்சஹீத் சரீஃப் அலி அவர்கள் கல்குடா மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இதனை அவர்களால் ஒரு காலமும் அழிக்க முடியாது. நிகழ்காலத்தில் உண்மைகள் தோற்கடிக்கப்பட்டு காலம் கடந்ததும் அவைகள் நிரூபிக்கப்படும் என ஓர் அறிஞ்சன் கூறிச்சென்ற கருத்தானது அஸ்சஹீத் சரீஃப் அலி அவர்களுடைய கொலையைப் போல் ஏராளமான கொலைகளுக்கு பிற்பாடாவது நிரூபனமாகியிருப்பதானது, அது உண்மை தத்துவ கோட்பாடாடு என்பதனை மீண்டும் உலகத்தில் நிரூபித்து காட்டி இருக்கின்றது.

கொலை செய்யப்பட்டு 25 வருடங்களுக்கு பிற்பாடும் மக்கள் மனங்களில் இவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருந்தாலும், கல்குடாவின் நிகழ்கால, எதிர்கால இளம் சமூதாயத்தினரின் உள்ளங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக இவர் கொலை செய்யப்பட்ட ஆரம்பகாலத்திலேயே செம்மன்னோடை கிராமத்தை மையமாக கொண்டு
SATO (SARIFF ALI TEACHER ORGANAIZATION) விளையாட்டு கழகமும், மைதானதும் இவரின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அப்பொது பாராளமன்ற உறுப்பினராக இருந்தவரும் தற்போது அமைச்சராக உள்ளவருமான கெளரவ பஸீர் சேஹுதாவூத் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற அதிபர் MCHH.மொஹம்மட் அவர்கள் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் அதிபராக இருந்த போது அஸ்சஹீத் சரீஃப் அலி அவர்களுடைய காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாடி பாடசாலை கட்டடத்துக்கு அன்னாருடைய பெயரை ஞாபகமாக வைத்தார்.

இவற்றை எல்லாம் தாண்டி கடுமையான முயற்சிக்கு மத்தியில் கல்குடாவின் முன்னால் அமைச்சரும் தற்போதைய மாகான சபை உறுப்பினருமான MSS.அமீர் அலி அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் ஓட்டமாவடி
MPCS  இடத்தினை பெற்று அன்னருடைய ஞாபகர்த்தமாக சரீஃப் அலி வித்தியாலயம் எனும் ஆரம்ப பாடசாலையை ஓட்டமாவடியில் அமைத்தமையானது வரலாற்றில் அழிக்க முடியாத அமீர் அலி அவர்களுடைய பெரும்பங்களிப்பாகவே மக்களால் பார்க்கப்படுகின்றது. இந்த பாடசாலையானது சரீஃப் அலி அவர்களுடைய பெயரில் இருப்பதற்காக மட்டுமே பெற்றோர்கள் முன்னுரிமை கொடுத்து தங்களுடைய பிள்ளைகளை இந்த பாடசாலையில் சேர்ப்பதற்கு விரும்புவதானது 25 வருடங்கள் கடந்தும் மக்கள் அவர் மேல் வைத்திருக்கும் அன்பினையே எடுத்துக்காட்டுவதாக அமைய பெற்றுள்ளது.

இவ்வாறு அழியா வரலாற்று நாயகனாகவும், சிறந்த ஒழுக்க கல்வியினை கல்குடா பிரதேச மாணவர்களுக்கு போதித்த மிகச்சிறந்த ஆசான் எனும் நட்பெயரினையும் ஸஹீதாக்கப்பட்டு பல வருடங்கள உருண்டோடிய நிலையிலும் மக்கள் மனதில் தனக்கென்ற ஓர் இடத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ள அஸ்சஹீத் சரீஃப் அலி அவர்களுக்கு அல்லாஹ் அடியானுக்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ள ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க கல்குடா சமூகம் பிரார்த்திக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்வதோடு, மேலும் நிகழ்காலத்தில் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் அனேகமான பாடசாலைகளில் கடையாற்றுகின்ற அதிபர்களும், 35 வயதினை தாண்டிய ஆசிரியர்களும் ஏதோ ஒரு வகையில் இவருடைய மானவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவதோடு, முடியுமானவரை அவருடைய நிருவாக முறையினையும், ஒழுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் ஞாபகப்படுத்தி கொள்ளுமாறும் அதிபர்களையும், ஆசியர்களையும் வேண்டியவனாக அன்னாரை ஞாபகப்படுத்தி இக்கட்டுரையை எழுதியவன் என்றவகையில் தனிப்பட்ட முறையில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். (படங்களில் சிவப்பு நிறத்தால் வட்டமிடப்பட்டு காட்டப்பட்டிருப்பவர்தான் அஸ்ஸஹீத் சரீஃப் அலி அவர்கள்)

 நன்றி - ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் மொஹமட் புஹாரி.