( எஸ்.அஷ்ரப்கான் )
முகவர்
அரசியலில் ஈடுபடும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இனிமேலாவது சிந்தித்து செயற்பட்டு,
எங்கெல்லாம் முஸ்லிம்களின் உரிமைகளை பெறக்கூடிய வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகின்றதோ
அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும் அதன் மூலம் எதிர்காலத்தில்
சிறந்த ஒரு அரசியல் நீரோட்டத்தை ஏற்படுத்த முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின்
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.
ஊவா
தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் குறிப்பிடும்போது,
இத்தேர்தலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் இணைவினை மக்கள் நிராகரித்திருக்கின்றார்கள். இதன் மூலம்
ஆளும் தரப்பினருடனான இக்கட்சிகளினை மக்கள் நிராகரிக்க தொடங்கியிருக்கின்றார்கள் என்பதை
உணர முடிகின்றது. பொதுவாக முஸ்லிம்களுக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அட்டகாசமான அரசியல்
நடவடிக்கைகள் மூலமாகவும், ஆளும் தரப்பு வேட்பாளர்களாக இருந்தவர்களினை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
என்பதை இத்தேர்தல் வெளிக்காட்டியிருக்கின்றது. அரசினுடைய முகவராக செயற்பட்டதன் காரணமாகவே
இத்தேர்தலில் இரட்டை இலை தோல்வி கண்டிருக்கின்றது. இவர்களின் வங்கரோத்து அரசியல் பிரச்சாரத்தினால்தான்
ஐக்கிய தேசியக்கட்சிக்கு வர இருந்த முஸ்லிம் ஆசனமும் இழக்கப்பட்டிருக்கின்றது.
ஊவா
மாகாண மக்கள் சிறந்த முறையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவை பெருக்கியிருக்கின்றார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலின்போது மொனராகலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப்பெற்ற
ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை அதிகமாக ஆசனங்களை பெற்றிருக்கின்றது. அதேபோன்று பதுளை
மாவட்டத்தைப் பொறுத்தளவில் 2009 இல் 5 ஆசனங்களைப்பெற்றது. தற்போது 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது.
இதன் மூலம் அங்குள்ள மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த துணிந்திருக்கின்றார்கள்
என்பதை உணர முடிகிறது.
எதிர்வருகின்ற
தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஆரம்பப்படியே
இந்த தேர்தல் முடிவுகளாகும். இந்த முடிவினை ஏற்படுத்திய பதுளை மக்கள் மற்றும் இந்த
மாற்றம் வர வேண்டுமென்று எதிர்பார்த்திருந்த நாட்டு மக்களுக்கும் ஐக்கிய தேசியக்கட்சி
சார்பாக நன்றிகளைத் தெரிவித்தக்கொள்கின்றேன்.
ஊவா
தேர்தலில் ஆளும் தரப்பு வேட்பாளராக இருந்த ஸசீந்திர ராஜபக்ஸவை விட ஐக்கிய தேசியக்கட்சி
முதலமைச்சர் வேட்பாளர் 1 இலட்சத்து 74 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட வாக்குகைளைப் பெற்றிருக்கின்றார். இதன் மூலம் முன்னைய தேர்தலைவிட இம்முறை
3 தொகுதிகளை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியிருக்கின்றது. இதில் சில தொகுதிகளில் சிறிய
தொகை வாக்குகளாலேயே சிறிது சரிவு ஏற்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் மக்கள் சிந்தித்து
செயற்படுவார்கள் என்ற நிலை தற்போது தெரிகின்றது. இதனால் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அடித்தளம்,
ஆணை மக்களால் இங்கு போடப்பட்டுள்ளது. இதன் தொடரில் பெரும் மாற்றத்தை நோக்கி இந்த நாட்டு
மக்கள் எதிர்காலத்தில் பயணிக்க இருக்கின்றார்கள் என்ற இனிப்பான செய்தியை மக்களுக்கு
தெரிவித்துக்கொள்ள முடியும்.
பதுளை
மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஆசனம் இழக்கப்பட்டிருக்கிறது. காரணம் கூறப்போனால் அங்கு
முஸ்லிம்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிரந்த அமீர் மற்றும் நஸீர் ஆகியோரில் நஸீர்
என்கின்ற நபர் 16 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கின்றார். இன்னும் 5 ஆயிரம் வாக்குகள்
பெறப்பட்டிருந்தால் முஸ்லிம் ஆசனம் ஒன்றும் அங்கு பெறப்பட்டிருக்கும்.
இந்த
முஸ்லிம் கட்சிகளினுடைய கூட்டிணைப்பு மூலமான பிரச்சார நடவடிக்கைகள் முஸ்லிம் வாக்குகளை
சூரையாடி அரசுக்கு சோரம் போனதன் காரணமாகவே அங்கு வர இருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம்
பறி போயிருக்கின்றது.