பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பாகிஸ்தான் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 56 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன, எனினும் நான்காவது விக்கெட்டிற்காக இணைந்த மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனுஸ் கான் ஜோடி தங்களுக்குள் 100 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியினை ஸ்திர நிலைக்கு இட்டுச் சென்றனர்.
மிஸ்பா உல் ஹக் 31 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார், இந்நிலையில் ஐந்தாவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த யூனுஸ் கான் மற்றும் அசாட் ஷபிக் ஆகியோர் தமக்குள் பிரிக்கப்படாத 101 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.
இன்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அணியின் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது, யூனுஸ் கான் 133 ஓட்டங்களையும் அசாட் அலி 55 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.