கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் நிர்மூலமாக்கப்பட்டு அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகள் மற்றும் கழிவுகளை அகற்றி சாய்ந்தமருது பிரதேசத்தின் கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம் நேற்று முன்தினம் (31) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ஏ.ஏ.பஷீரின் முயற்சியால் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூரின் வழிகாட்டுதலின் கீழ் சாய்ந்தமருதைச் சேர்ந்த சமூக சேவையாளர் ஒருவரின் அனுசரணையுடன் முதல் சாய்ந்தமருது கடற்கரை வீதியில் உள்ள மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து கட்டட இடிபாடுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநகர சபையின் உறுப்பினர் ஏ.ஏ.பஷீர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் எம்.எம்.எம்.றபீக் ஆகியோர் கலந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த கட்டட இடிபாடுகள் மற்றும் கழிவுகள் காரணமாக, மீனவர்கள் மிகுந்த அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர்.
அத்துடன் கட்டட இடிபாடுகளுக்கு மேலாக பிரதேசவாசிகளால் கழிவுகளும் வீசப்பட்டு வருவதால் கடற்கரையின் அழகு குன்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.