Advertisement

Main Ad

உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க

உங்களுக்கு சரியா தூக்கம் வரலியா? அப்ப இத படிங்க

தூக்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் அநேகருக்கு சரியில்லாமலே இருக்கிறது. காரணம் டென்ஷன், மிக அதிக உடல் உழைப்பு, மிக குறைவான உடல் உழைப்பு, நேரமின்மை, ஒழுக்கமின்மை காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூங்கியே கழிக்கின்றான். இது சரியாக அமையாத போது, உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகின்றது. தூக்கம் முறையாய் பெற...

* பகலில் நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.

* நல்ல உடல் ஆரோக்கியம் உடையோரும், உடல் சோர்வு பெறுவோரும் நல்ல தூக்கத்தினை பெறுகின்றனர்.

* ஒருநாள் விட்டு ஒரு நாளாவது தலையணை, மெத்தை உறைகளை மாற்றி விடுங்கள். தினமும் செய்வது மிகவும் சிறந்தது.

* பகல் வேளைகளில், மாலை வேளைகளிலும் நன்கு உங்கள் அறையில் வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் அமையும்படி செய்யுங்கள். இது இரவில், `ஏர்கண்டிஷனர்' உபயோகிப்பவர்களுக்கு மிகவும் நல்லது. அல்லாதவர்கள் கொசு கடிக்காதபடி வலையினை அமைத்து அறையை காற்றோட்டம் மிக்கதாக செய்து விடுங்கள்.

* உங்கள் தலையணை மற்றும் மெத்தை உங்களுக்கு இதமாக உள்ளதா அல்லது கழுத்து வலி, உடல் வலி கொடுக்கின்றதா என்பதினை கவனியுங்கள்.

* தூங்கப் போவதற்கு முன்னால், கொதிக்க கொதிக்க வெந்நீரில் குளிக்காதீர்கள். வெதுவெதுப்பான நீர் மிகவும் நல்லது.

* உங்கள் அறையில் அதிக வெளிச்சமோ, அதிக சப்தமோ இல்லாதிருப்பது நல்ல தூக்கத்தினை அளிக்கும்.

* தூங்கும் நொடி வரை டிவி, கம்ப்யூட்டர் இவைகளை பயன்படுத்தாதீர்கள். மாலையிலிருந்து நீங்கள் எந்த உணர்வுடன் இருக்கின்றீர்களோ அதைப் பொறுத்தே உங்கள் தூக்கமும் அமையும் என்பதை உணருங்கள்.

* மிக மென்மையான இசை, தூக்கத்திற்கு இதமானது.

* முடிந்த வரையில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்துவிடுங்கள்.

* படுத்து 15 நிமிடங்கள் வரையில் தூக்கம் வரவில்லை என்றால், படுக்கையில் புரண்டுக் கொண்டிருக்காதீர்கள். உடனடியாக எழுந்து நல்ல தரமான புத்தகத்தைப் படிக்கவோ அல்லது மென்மையான இசையை கேட்கவோ செய்யுங்கள்.

* இரவு பல் தேய்ப்பதும், இரவு ஆடை அணிவதும் அவசியம்.

* மதியத்திற்கு பிறகு காப்பி அருந்தாதீர்கள்.

* இரவு உணவு அதிக மசாலா சேர்த்ததாக இருக்கக் கூடாது.`

* உங்கள் அலார கடிகாரத்தை காதுக்கு பக்கத்தில் வைத்து தூங்காதீர்கள். அதன் ஒலி உங்களை தொந்தரவு செய்துக் கொண்டே இருக்கும்.

* இரவில் கடும் உடற்பயிற்சி செய்யாதீர்கள்.

* எப்பொழுதுமே மது அருந்தாதீர்கள். குறிப்பாக, இரவில்.

* பசியோடு படுக்கைக்குச் செல்லாதீர்கள். இரவு உணவிற்குப் பிறகும் பசி எடுத்தால் பழம், ஒரு கிளாஸ் பால் அருந்துங்கள்.

டாக்டர் கமலி ஸ்ரீபால்.