கட்டாரிலிருந்து முஹம்மத் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலர், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளை பெறமுடியாது கஷ்ட்டப்படுகின்றனர்.அவ்வாறு கட்டார் நாட்டில் அவதியுறும் நண்பர்கள் பலன் பெறுவதற்காக இந்த வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நம்மவர்கள் கோர்ட் படியேற விரும்புவதில்லை. எமது தாய்நாடுகளில் கோர்ட்களில் காலம் இழுத்தடிக்கப்படுவதுபோல இங்கும் இழுத்தடிப்பார்கள் என்ற அனுமானமே இதற்கான காரணம். ஆனால் கட்டார் லேபர் கோர்ட்டில் மிக மிக விரைவாக தீர்வு கிடைக்கிறது.எவ்வாறான பிரச்சினைகளுக்கு செல்லலாம்? உங்கள் தொழில் ஒப்பந்தந்தில் இருக்கும் உரிமைகளான சம்பளம், வேலை நேரம், விடுமுறை போன்ற விடயங்களுக்கும் கட்டாரில் பொதுவான தொழில் நியமங்களால் உறுதிசெய்யப்பட்ட உரிமைகளுக்காகவும் நீங்கள் லேபர் கோர்ட் செல்லலாம். லேபர் கோர்ட் எங்கே அமைந்துள்ளது? சனயாவில் (Industrial Area), அல் அத்தியா பிரதான பாதையில், Street 13 என்று அடையாளப்படுத்தக்கூடிய இடத்தில் (Right Side) அமைந்துள்ளது. தேவையான ஆவணங்கள்உங்கள் கத்தார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் கொப்பி, வீசா கொப்பி என ஏதாவது ஒன்று உங்களிடம் இருக்கவேண்டும். இலங்கை உணவகங்களான Street 10 இல் இருக்கும் Colombo Restaurent க்கு எதிரில் உள்ள டைபிங் செண்டருக்கு சென்று ஒரு படிவத்தை அரபியில் பூர்த்தி செய்யவேண்டும். அங்கு வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒருவரிடம் விடயத்தை சொன்னால் அவர் டைப் செய்து தருவார். கட்டணமாக 5 ரியால் எடுப்பார்கள்.லேபர் கோர்ட்டில் செய்யவேண்டியது என்ன?சம்பந்தப்பட்ட நபர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவர். நண்பர்கள் உதவியாளர்களுக்கு அனுமதியில்லை. ஒரு கம்பனியிலிருந்து பலர் சென்றால் அதில் ஒருத்தர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார். ஏனையவர்கள் அழைக்கப்பட்டால் மாத்திரம் உள்ளே செல்வதற்காக வெளியில் காத்திருக்கவேண்டும். உள்ளே நுழைந்ததும் ரிசப்சனில் இருக்கும் அரபியிடம் உங்கள் அடையாள அட்டை அல்லது பாஸ்போட் அல்லது அதன் பிரதியையும் நீங்கள் அரபியில் டைப்செய்து கொண்டுவந்திருக்கும் படிவத்தையும் கொடுக்கவேண்டும். அதை சரிபார்த்தபின் உங்களை காத்திருக்க சொல்வர். உங்கள் கோரிக்கை தொடர்பாக விளக்கம் தேவைப்பட்டால் லேபர் கோர்ட் அதிகாரி உங்களை அழைப்பார். அல்லாவிட்டால் உங்கள் கம்பனிக்கு உங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தும் கடிதம் ஒன்றை உங்களுக்கு தருவார்கள். அதன் பிரதி ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும். பிரதியை நீங்கள் வைத்துக்கொண்டு கடிதத்தை உங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக கம்பனியில் பொறுப்பான அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். பெரும்பாலும் இந்த கடிதத்தில் அடுத்த வேலைநாளில் கம்பனியின் பிரதிநிதியை லேபர் கோர்ட்டுக்கு குறிப்பிட்ட நேரமொன்றுக்கு வரும்படி சொல்லியிருக்கும். நீங்கள் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக லேபர் கோர்ட்டிற்கு சென்றுவிடுங்கள்.கம்பனி பிரதிநிதி வந்ததும், அவர்கள் தரப்பு நியாயம் ஏதும் இருந்தால் சொல்வார்கள். அப்படி இல்லையென்றால் உங்கள் உரிமைகளை உறுதி செய்யும் அறிவுறுத்தல்கள் கம்பனிக்கு கட்டளையிடப்படும். கம்பனி பிரதிநிதி வராவிட்டால்?கம்பனி பிரதிநிதி அங்கு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து அரை மணித்தியாலத்திற்குள் வரவேண்டும். அப்படி வரவில்லையென்றால் இரண்டாவது கடிதம் தரப்படும். அதன் பிரதியை நீங்கள் வைத்துக்கொண்டும் கடிதத்தை மீண்டும் கம்பனியின் பொறுப்பான அதிகாரியிடம் கூடிய விரைவில் சேர்த்துவிடுங்கள். கட்டார் லேபர் கோர்ட் இன் சிறப்பான அம்சமாக 3 வேலைநாட்களுக்குள் உங்களுக்கு ஒரு முடிவு கிடைத்து விடுவதை சொல்லலாம். இரு தரப்பும் சிக்கலான பிரச்சினையையோ, இணக்கம் எய்தப்படாத பிரச்சினையையோ கொண்டு சென்றிருந்தால் மட்டும் சாதாரண கோர்ட்டில் ஹைகோர்ட்ட்லில் வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படும்.கட்டார் லேபர் கோர்ட்டில் இருக்கும் பிரச்சினையாக மொழிப்பிரச்சினையை சொல்லலாம். இதன்காரணமாக ஆரம்பத்திலேயே படிவத்தை பூர்த்தி செய்யும்போது தெளிவாக பிரச்சினைகளை சுருக்கமாக குறிப்பிடுவது அவசியம்.

