மதவிவகாரங்கள் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ்
பிரிவினை உடனடியாக கலைக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தி முஸ்லிம்கள்
சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தவே திட்டம் தீட்டியுள்ளனர்
என ராவணா சக்தி அமைப்பு கோரியுள்ளது.
மத விவகாரங்களுக்கான பொலிஸ் பிரிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து
நேற்று பௌத்தசாசன அமைச்சிற்கு சென்ற ராவணா சக்தி அமைப்பின் செயலாளர்
இத்தேபான சத்தா திஸ்ஸ தேரர் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மதவிவகார பிரதி
அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார்.
இதன்போது ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேபான சத்தா திஸ்ஸ தேரர் கருத்துத் தெரிவிக்கையில்;
இலங்கையில் மத அடக்கு முறைகள் மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பான்மை
இனத்தவரினால் ஒருபோதும் சிறுபான்மை மதத்தவர்கள்
ஒடுக்கப்படவில்லை.
எனினும், சிறுசிறு பிரச்சினைகளை பெரிதுப்படுத்தி சர்வதேச அளவில்
கொண்டு செல்லவே முஸ்லிம்கள் எத்தனிக்கின்றனர். தற்போது மதப்
பிரச்சினைக்கான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதனால் நாட்டில் மத
அடக்கு முறை தலைவிரித்தாடுகின்றது என்ற செய்தி சர்வதேசத்திடம்
எடுத்துச் செல்லப்படுகின்றது. இது ஒருசிலரின் திட்டமிட்ட
சதித்திட்டமாகும்.
ஜனாதிபதி இதனை உடனடியாக கவனத்திற் கொண்டு மத விவகாரப் பொலிஸ்
பிரிவினை தடைசெய்ய வேண்டும். ஒருசில சூழ்ச்சிக்காரர்களின் கதையைக்
கேட்டு ஜனாதிபதி தவறான முடிவுகளை எடுத்து விடக்கூடாது.
மேலும், எதிர்வரும் வெசாக் தினத்திற்கு முன்னர் இந்தப் பொலிஸ் பிரிவினை
கலைக்க வேண்டும். இல்லையேல் மோசமான பின் விளைவுகளை அனைவரும்
எதிர்கொள்ள வேண்டிவரும். இதனை நாம் கடுமையாக எச்சரித்து
குறிப்பிடுகின்றோம். இதற்கு மேலும் மத விவகாரம் தொடர்பான பொலிஸ்
பிரிவினை செயற்படுத்தினால் பௌத்தசாசன அமைச்சினுள் எமது எதிர்ப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வோம் அமைச்சுக்குள் உட்பிரவேசித்து எமது அமைப்பினர்
ஆர்ப்பாட்டங்களை செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
