இன்று நாட்டில் இனவாதம்
கொடிகட்டிப்பறக்கிறது. அதில் முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் மிகப்
பரந்தளவில் தாக்கத்திற்குள்ளாக்கப்படுகின்ற ஒரு இனம் முஸ்லிம்களாவர்.
எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களையும், அந்த அமைச்சர்களையும் இனவாதம்பூசி
ஒதுக்குகின்ற ஒருநிலமைக்குள் இன்று பொதுபலசேன ஈடுபட்டுள்ளமை தெட்டத்தெளிவான
விடயமாகும். கடந்த புதன்கிழமையன்று(23.04.2014)அன்று கைத்தொழில் மற்றும்
வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள அலுவலகம், பொது பல சேனா
அமைப்பினரால் முற்றுகையிடப்பட்டது. காரணம் இந்த பொதுபல சேனாவிற்கு எதிரான
அமைப்பினரான ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த
அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொதுபல சேனா அமைப்பினர் குறித்த
அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் அந்த நேரத்தில் அமைச்சர் அங்கிருக்கவில்லை
என்றும் நடைபெற்ற சம்பவத்தை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த ஜனபல சேனாவின் வருகையானது
முஸ்லிம்களுக்கு ஓர் ஆறுதலைத் தந்தது. பொதுபல சேனாவின் நடவடிக்கை
கட்டுமீறிச் செல்கின்றது, அவர்கள்மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
அவர்களுக்கு பின்னாலிருந்து ஏதோ ஓர் சக்தியொன்று இயக்கிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்களோ, தமிழர்களோ எங்களுக்குரியவர்கள். அவர்களும் இந்நாட்டின்
குடிகள் என்பதை எடுத்துரைக்கும் நோக்குடன் பொதுபலவினரின் ஆட்டத்தை
ஆட்டங்காணச் செய்ய இந்த எதிர் அமைப்பினர் முற்பட்டனர். அவர்களின்
நடத்தைக்கு எதிராக பொதுபலவினர் நடந்துகொண்ட அநாகரிகமற்ற செயற்பாடுகளையும்
கடந்தவாரத்தில் ஊடகங்கள் வாயிலாக வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்நிலையில் அமைச்சர் றிஷாட் பதியூதீன்
தன்னுடைய மக்களுக்குரிய இழந்த பொருளாதாரத்தை மீட்டுக் கொள்வதற்காக
குடியேற்றங்களை அமைக்க முற்பட்டபோது இந்த பொதுபலசேனாவிர் கூஜா தூக்க
ஆரம்பித்தனர். அதற்கு வில்பத்து வனப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில்
வீட்டுத்திட்டங்களை அமைக்க முற்பட்டுள்ளார். அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக
காரசாரமான புகைச்சலை மேற்கொண்ட பொதுபல சேனாவினர் அவர்களின் அட்டகாசத்திற்கு
சாவுமணி அடிக்கவே இந்த ஜனபல சேனாவினர் தோற்றம் பெற்றனர். இதனை
பொறுத்துக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்ற பொதுபல சேனாவினர் அமைச்சர்
கொழும்பு அலுவலகத்திற்குள் வட்டரக்க விஜித தேரரைத் தேடுகின்றனர். இது என்ன
நியாமிது.
இந்த செயற்பாட்டினை ஐக்கியதேசியக்
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பாலித ரங்கே பண்டாவும்
உறுதிப்படுத்தியிருந்தார். பொதுபல சேனா அமைச்சர் றிஷாட் பதியுதீனின்
குடியேற்றத்தை எதிர்த்து பொதுபல சேனாவின் நடவடிக்கை சரியானது என்பதை
உறுதிப்படுத்தியிருந்தார். அதாவது அமைச்சர் றிசாத் பதியூதீன்
சம்பந்தப்பட்டுள்ள வில்பத்து விலங்குகள் சரணாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு
வரும் சட்டவிரோத குடியேற்றதை பொதுபல சேனா எதிர்ப்பது நியாயமானது எனவும்,
பொதுபல சேனா, இந்த சட்டவிரோத குடியேற்றத்தை கடுமையாக எதிர்ப்பதை தான்
ஏற்றுக்கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித
ரங்கே பண்டார தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் எந்த
நாடும் விலங்குகளுக்கு ஒதுக்கப்படும் வலயங்களில் எவ்விதமான
நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. அமைச்சர் றிசாத் பதியூதீன் வில்பத்து
வனத்திற்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம் மக்களை அங்கு
குடியேற்றியுள்ளார். இது பாரதூரமான சட்டவிரோத நடவடிக்கை. வில்பத்து ஊடாக
மன்னார் வரை வீதியொன்றை நிர்மாணிக்க தற்போதைய அரசாங்கம் இதற்கு முன்னர்
அனுமதி வழங்கியிருந்தது எனவும் பாலித ரங்கே பண்டார மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின்
கொஞ்சநஞ்ச வாக்குகளையும் வழங்கிக் கொண்டிருப்பவர்கள் இந்த முஸ்லிம்கள்.
அந்த முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைக்கு, அமைச்சரின் செயற்பாடுகளில்
ஏதாவது பிரச்சினை இருந்தால் நேரடியாக அல்லது ஊடகங்கள் வழியாக பாராளுமன்ற
உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருக்கலாம். அமைச்சர் றிஷாட்டின்
நடவடிக்கை பிழையானது, பொதுபல சேனாவினர் எதிர்ப்பது நியாயமானது என்பதை
நியாயப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு முன்னர் பொதுபல
சேனாவினர் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டிருந்த பல
சம்பங்களையும் நியாப்படுத்தியுள்ளாரா என்பதும் கேட்க வேண்டிய வினாவாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியென்றால் அங்கே முஸ்லிம்கள்தான் அதிகளவான வாக்குகளை
அளிப்பவர்கள் என்கிற கருத்து ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவருக்கு
தெரியாமல் போனது எப்படி!
முஸ்லிம் சமூகத்தின் முழுமையான ஆதரவைப்
பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றஊப் ஹக்கீம்
அவர்களும் அண்மையில் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.
சட்டப்படியான அமைச்சர் சட்டப்படி பேசியுள்ளார். உதட்டளவில் மாத்திரம் பேசி
மக்களை திசை திருப்பாமல் அமைச்சர் றஊப் ஹக்கீம் உண்மையாகப் பேசியிருப்பாராக
இருந்தால் அந்த விடயத்தை உடனடியாக அரசின் அதி உச்ச பீடத்திற்கு
தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். அப்படி தெளிபடுத்துபவர்கள் யார்?
ஜனாதிபதிக்கு உரிய விடயத்தை சரியான முறையில் கூறாமல் இருந்தால் அடுத்த
தேர்தலின்போது இது சம்பந்தமாக முஸ்லிம் அமைச்சர் யாரும் எதுவுமே கூறவில்லை.
என்று கூறுவார்.
நம்முடைய முஸ்லிம் அமைச்சரான றஊப்
ஹக்கீம் அப்படி பொதுபலசேனாவினைப் பற்றிக் அப்படிய என்னதான்
கூறியிருக்கிறார் என்பதை பார்ப்போம். அதாவது 'சட்டத்தை மீறி நடந்து
கொள்ளும் பொதுபல சேனாவின் போக்குகளுக்கு ஒரு வித ஆசீர்வாதம் இருப்பதைப்
போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது. இது முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருவித
அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, இது தொடர்பான
சந்தேகங்களைப் போக்கி, சமூகங்களுக்கிடையே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த
வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் தார்மிகக் கடமையாகும்' என்று ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அண்மையில்
தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் 'பொதுபல
சேனாவின் நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தும் வகையிலும்,
கீழ்த்தரமானவையாகவும் அமைந்துள்ளன. முஸ்லிம் மக்களால் போற்றப்படும் புனித
குர்ஆனை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். இவ்வாறானவர்களின்
நாகரிகமற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் சட்ட ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட
வேண்டிய ஒன்றாகும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். பொதுபலசேனாவின்
நடவடிக்கைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ள
கருத்துக்களை அடுத்து, பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு பொதுபலசேனா விடுத்துள்ள
அழைப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் முஸ்லிம்
மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்று பலரும்
கூறுகின்றனர். இந்த நாட்டில் பௌத்த சிங்கள மக்கள் மாத்திரமே வாழ வேண்டும்
என்ற ஓர் சிந்தனையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதுமாத்திரமன்றி, தான் தோன்றித் தனமான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் அவர்கள்
ஈடுபடுகின்றனர். புனித குர்ஆனை அவர்கள் இழிவுபடுத்துகின்றனர். இது முஸ்லிம்
மக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறான தீவிரவாதப்
போக்குடைய அமைப்புக்களுடன் நான் விவாதத்தில் கலந்து கொள்ள ஒருபோதும்
சம்மதிக்கப் போவதில்லை. அதுவே அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகவும்
அமைந்துவிடும்.
அவர்களின் அநாகரீகமான வார்த்தைப்
பிரயோகங்களை இதர பௌத்த குருமாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த குழுவினருக்கு
சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயக்கம் காட்டக் கூடாது. இவர்கள்
சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாதுகாப்புக்குப்
பொறுப்பானவர்கள் அதனைத் தட்டிக் கேட்க வேண்டும். காவியுடையுடன் இவ்வாறு
அவர்கள் நடந்து கொள்ளும் போது கூட்டத்தின் பாதுகாவலர்கள் தயக்கம் காட்டு
நிலை காணப்படுகின்றது. இவர்கள் எவரது அனுக்கிரகமும் இன்றி தன்னிச்சையாகவே
செயற்படுகின்றார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தார்மீகக்
கடமை இன்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தீவிரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட
வேண்டும். அண்மையில் நான் மல்வத்த அஸ்கிரிய ராமனிய மாநாயக்க தேரர்களை
சந்தித்து உரையாடியிருந்தேன். அவர்கள் பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை ஒரு
போதும் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்கள். பௌத்த மதகுருமார் ஒரு
போதும் உணர்ச்சிகளுக்கு ஆளாகக் கூடாது என்று எடுத்து விளக்கினார்கள்.
அத்துடன் இவர்களின் செயற்பாடுகள் ஒரு போதும் நல்லிணக்கத்துக்கு
வழிசமைக்காது, குந்தகத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர்கள் என்னிடம்
குறிப்பிட்டனர்' எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்
யாரை யார் தடைசெய்வது?
அதேவேளை பௌத்த சிங்கள மத தர்மத்தினை
அவமதிக்கும் செயலை தௌஹீத் ஜமாத் இயக்கமே மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கம்
உடனடியாக அகில இலங்கை தௌஹீத் ஜமாத் இயக்கத்தை தடை செய்து இஸ்லாமிய
தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பினர்
தெரிவித்துள்ளனர். பௌத்த சாசனம் சிறந்ததா? அல்லது குர் – ஆன் சிறந்ததா
என்பதை விவாதிக்க நாம் தயார். தைரியமிருந்தால் முஸ்லிம்கள் விவாதத்திற்கு
வாருங்கள் எனவும் அவ் அமைப்பு சவால் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பொது பல சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம் மத விடயங்களையோ, அவர்களின் புனித நூலான திருக்குர் ஆனையோ நாம்
ஒரு போதும் அவமதிக்கவில்லை. அதேபோல் ஏனைய மதத்தவர்களின் விடயங்களில் நாம்
அநாவசியமாக தலையிடவுமில்லை. ஆனால், முஸ்லிம் அமைப்பான தௌஹீத் ஜமாத்
இயக்கமானது பௌத்த சாசனத்தையும், பௌத்த கலாசாரத்தினையும் அவமதித்தும் எமது
பெண்களை மோசமாக விமர்சித்தும் கருத்துகளை பரப்பி மேடைகளிலும் பகிரங்கமாகப்
பேசியுள்ளனர். இவை வீடியோ காணொளிகளாக பதிவு செய்யப்பட்டு எம்மிடம் உள்ளன.
அவற்றினை உடனடியாக நாம் பாதுகாப்பு அமைச்சிற்கும், ஜனாதிபதிக்கும்
அனுப்பியுள்ளோம்.
அவை தொடர்பில் முதலில் விசாரணைகளை
நடாத்தி அகில இலங்கை தௌஹீத் ஜமாத் இயக்கத்தினை உடனடியாக தடை செய்ய
வேண்டும். இலங்கையில் தீவிரவாத இயக்கமாக மட்டுமின்றி இந்தியாவின் தமிழ்
நாட்டு தௌஹீத் ஜமாத் முஸ்லிம் இயக்கத்துடனும் இணைந்து தமது மதவாத
தீவிரவாதக் கொள்கைகளை பரப்புகின்றனர். ஆயுதம் ஏந்தாது முஸ்லிம்களை மன
ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி தீவிரவாதக் கொள்கைகளை பரப்புகின்றனர். இது
சில காலங்களில் மிகப்பெரிய தீவிரவாத சக்தியாக மாறி நாட்டையே பயங்கரவாத
பூமியாக மாற்றியமைத்து விடும்.
எனவே, அரசாங்கம் உடனடியாக அகில இலங்கை
தௌஹீத் இயக்கத்தை தடை செய்து பௌத்த மக்களையும் எமது புனிதத் தன்மையினையும்
பாதுகாக்க வேண்டும். பௌத்த சாசனம் பொய்யானது எனவும் புத்தர் இறைவன்
இல்லையெனவும் முஸ்லிம் அமைப்புகள் விமர்சிக்கின்றனர். பௌத்த மதமா அல்லது
இஸ்லாமிய மா, பௌத்த சாசனமா அல்லது குர்-ஆனா சிறந்ததென்பது தொடர்பில்
விவாதம் நடத்த நாம் தயார். தௌஹீத் ஜமாத் அமைப்பு தைரியமிருந்தால் எம்முடன்
விவாதத்திற்கு வரவேண்டும். நாம் ஒரு போதும் எவருக்கும் அஞ்சவில்லை. அதேபோல்
எவரையும் எந்த மத விடயங்களையும் அவமதிக்கவுமில்லை.
முஸ்லிம்கள் மீது தனிப்பட்ட ரீதியில்
எமக்கு எவ்வித விரோதமும் இல்லை. ஆனால், சில முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள்
எம்மை சீண்டும் நோக்கத்தில் பௌத்த மதத்தையே கொச்சைப்படுத்துகின்றனர். இதனை
பௌத்தர்கள் எவரும் பொறுத்து போகமாட்டார்கள். எனவே, இனிமேலும் இவ்முஸ்லிம்
தீவிரவாத அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயற்பட இடம் கொடுத்தால் நாட்டில்
முஸ்லிம் மத மாற்றமும் பௌத்த மத அழிப்புமே இடம்பெறும் எனவும் அவர்
தெரிவித்தார். உண்மையில் இவ்வாறான பொய்களை பரப்புவதில் பொதுபலசேனாவிற்கு
நிகர் பொதுபலசோனாதான். இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு
அவமதிப்புக்களை மேற்கொண்டுவிட்டு தற்போது நாம் முஸ்லிம்களோடு தோழமை
பூண்டுள்ளோம் தௌஹீத் அமைப்புக்குத்தான் எதிர்ப்பு என்பதன் மர்மம்தான் என்ன?
அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்
பேராசிரியர் கும்புரகமுவ வஜிர நாயக்க தேரர் தெரிவித்த கருத்து இந்த
பொதுபலசேனாவிற்கு கட்டாயம் சேரவேண்டும். அவர் கூறியதாவது. இந்த உலகில்
வாழ்ந்தவர்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிரேஷ்டமானவர் என்றும், முழு
சமூகத்திற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு அருள் என்றும், ஆயுத
மாற்றம் மற்றும் சிந்தனை மாற்றம் ஆகிய இரண்டு வழிகள் மூலம் உலகில் தாக்கம்
செலுத்த முடியும். எனினும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிந்தனையின் ஊடாக
உலகில் பல மாற்றங்களை மேற்கொண்டார் என்றும், இதற்கு மேலதிகமாக அக்கால
இளைஞர்களை சிறந்தவர்களாகவும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மாற்றினார்கள்.
சூழல் கரிசனை குறித்து அல்குர்ஆன் மிகத் தெளிவாக கூறியுள்ளது. அடிமைகளின்
உரிமை குறித்தும் அல்குர்ஆனில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவும் பேராசியர் கும்புரகமுவ வஜிர தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அடிப்படையில் தற்போதைய நிலவரத்தின்
பிரகாரம் நல்லதோர் சந்தர்ப்பத்தை இறைவன் முஸ்லிம் அமைச்சர்களுக்கு
தந்துள்ளார். ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள் என்கிற குர் ஆன்
வசனத்தின்
பிரகாரம் பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று
சேர்ந்து இந்த பொதுபலசேனாவுக்கும், அவர்களை இயக்கக் கொண்டிருக்கும்
பின்னிலை கொண்டவர்களையும் முஸ்லிம் சமூகம் உணர்ந்து சரியான விடியலை நோக்கிய
பயணத்தில் முஸ்லிம் உம்மாவை ஒன்றுபடவைக்க முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்
ஒன்படுவார்களாக இருந்தால் அந்த நாள் இந்நாட்டின் வெற்றித்திருநாளாக
அமையும். இது நடைபெறுமா? நடைபெறாதா என்பது அவர்களின் கைகளில்தான் உண்டு.
