Advertisement

Main Ad

மருதமுனையின் கல்வி, சமூக மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அதிபர் திலகம் மஜீத்!



5(573)மருதமுனையின் கல்வி அபிவிருத்திக்கும் சமூக மேம்பாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அதிபர் திலகம் ஏ.எச்.எம்.மஜீத் அவர்களின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

1935.04.26ம் திகதி அப்துல் ஹமீது, சரீபா உம்மா தம்பதியினரின் ஒரே மகனாகப் பிறந்த இவர் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார். தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் எஸ்.எஸ்.சீ. பரீட்சை வரை அல்மனாரில் (அப்போதயஅரசினர் ஆண்கள் பாடசாலை) படித்த இவர் 1950, 1951களில் இரு வருடங்கள் ஹபுகஸ்தலாவையிலும் 9ம் 10ம் தரங்களில் கல்வி பயின்றார்.
1949ம் ஆண்டுகளில் படிப்பினை இடைநடுவில் கைவிட்டு பல்வேறு புற வேலைகளில் அலைச்சலுடன் ஈடுபட்டு பல துன்பமான அனுபவங்களை தனதாக்கி இலங்கையின் பல நகரங்களையும் பார்க்கும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொண்டார். இவ்வேளையில் புலவர்மணி ஆ.மு.சரிபுத்தீன் அவர்கள் இவரை நெறிப்படுத்தி உரிய திசையைக்காட்டி இவரை முன்னேற்றப் பாதையில் காலடி எடுத்துவைக்க உதவினார்

1952, 1953 காலப்பகுதியில் மருதமுனையின் கைத்தொழில்களில் ஒன்றாக பீடி சுற்றும் தொழிலும் இருந்தது. இதில் 675 ஆண், பெண் பீடித் தொழிலாளர்கள் இருந்தனர். இவர்களது சம்பள உயர்வு தொடர்பாக இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி தொழிற்சங்கம் அமைத்து இவரது தலைமையில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்து கோரிக்கையினை வென்று கொடுத்தார்.
1954ம் ஆண்டு எஸ்.எஸ்.சீ பரீட்சையில் சித்தியடைந்த இவர் 1956ம் ஆண்டு ஆசிரியர் கலாசாலை பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார். 1957 –1958 ஆண்டுவரை அட்டாளைச்சேனை ஆசிரியர பயிற்சிக் கலாசாலையின் பாராளுமன்றத்தின் கல்வி விவசாய அமைச்சராக சிறப்பாக செயற்பட்டார். கல்விப் பராயத்திலேயே வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் அண்ணாவின் ‘திராவிடன்’ பத்திரிகைகளையும் வாரந்தோறும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.

இதன் பயனாக முதலாவது எழுத்தாக ‘இலக்கியம் கற்பித்தல்’ கலையமுதம் சஞ்சிகையில் வெளியீடு செய்யப்பட்டது. அவ்வாறே பெரியப்பா, கறையான், வேலி, வெகுளி ஆகிய இவரது கதைகள் மிகவும் பிரசித்த பெற்றவைகளாகும். 15 இற்கும் மேற்பட்ட உருவகக் கதைகளையும் பல சிறுகதைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
05.01.1959 இல் கலாவௌ முஸ்லிம் வித்தியாலயத்தில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். மருதமுனை முதலாம் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் ஆகியவற்றின் தலைவர், செயலாளராக சிறப்பாக பணிபுரிந்தார்.

1960.12.03ம் திகதி திருமணம் செய்தார். 1963ம் ஆண்டு மருதமுனை அரசினர் கலவன் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றார். 1957 தொடக்கம் 1970 வரை மருதமுனை கரப்பந்தாட்ட அணியின் உப தலைவராக செயற்பட்டு அம்பாரை மாவட்டத்தில் இவ்வணியை பலமுள்ளதாக்கினார். கல்முனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு சுற்றுலாச் சென்று பல போட்டிகளில் பங்குபற்றி மருதமுனை அணி அதிக வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
1965 தொடக்கம் 1968 வரை மருதமுனை ஹஸனிய்யா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளராகவும் 1968 தொடக்கம் 1970 வரை அச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1965ம் ஆண்டு ஆசிரியர் ஆலோசகர் பரீட்சையில் சித்தியடைந்தார். 1966ம் ஆண்டு சம்மாந்துறை விவசாயப்பண்ணையில் விவசாயத்துறையில் பயிற்சி பெற்றார். 1963ம் ஆண்டு கல்வி நலச் சபை அமைத்து அதன் தலைவராக உழைத்தார். இக்காலப்பகுதியில் கல்விப்பணி மன்றம் ஒன்றை ஏற்படுத்தி அதன் தீவிர உறுப்பினராக செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

1969 தொடக்கம் 1970ம் ஆண்டு வரை பலாலி ஆசிரியர் கலாசாலையில் வர்;த்தக ஆசிரியராக பயிற்சி பெற்றார். அக்காலத்தில் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பாராளுமன்றத்தின் உணவு மின்சாரத்துறை அமைச்சராகஇ முஸ்லிம் மஜ்லிஸ் உப தலைவராக சிறப்பாகச் செயற்பட்டார். யாழ்பிறை எனும் வருடாந்த சஞ்சிகை வெளியீட்டில் ‘பெஷன் கேர்ள்’ எனும் இவருடைய சிறுகதை கல்லூரி மட்டப் போட்டியில் வெற்றி பெற்று யாழ்பிறையில் பிரசுரிக்கப்பட்டது.
1971ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தார். 1972ம் ஆண்டு பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சை முதற்கலைத்தேர்வில் மருதமுனையில் முதலாவதாக சித்தியடைந்தார். 1971 ஜனவரி தொடக்கம் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் வர்த்தக ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 18 மாணவர்களுடன் வர்த்தக வகுப்புக்களை ஆரம்பித்து 1973ம் ஆண்டு 240 மாணவர்கள் கொண்ட வர்த்தகப் பிரிவை உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டு அங்கிருந்து மாற்றலாகிச் சென்றார்.
1973ம் ஆண்டு கல்வி அமைச்சரான பதியுத்தீன் மஹ்மூத் மருதமுனைக்கு வருகை தந்து அல்மனாரின் கல்வி அபிவிருத்தியை ஆரம்பித்து வைத்தார். அவ்வேளையில் வரவேற்புக்குழு செயலாளராக ஏ.எச்.எம். மஜீத் முனைப்புடன் செயற்பட்டார்.

1973ம் ஆண்டு தொடக்கம் கலாவௌ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முதலாம் தர அதிபராக பொறுப்பேற்றார். மருதமுனையில் சுயபாஷா அதிபர் சேவையில் முதலாம் தரத்தைப்பெற்ற மூன்றாவது நபர் இவரே. அப்போது வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து 31 மாணவர்களை உயர் வகுப்பிற்கு அழைத்து வந்து அங்கு கலை, வர்த்தகப் பிரிவுகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாறே 1975ம் ஆண்டு திருகோணமலை தோப்பூர் மகா வித்தியாலயத்திலும் உயர்தர கலை, வர்த்தக பிரிவுகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1976ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி மருதமுனை அல்மனார் மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று அதிபராகப் பொறுப்பேற்றார். இப்பாடசாலையின் வரலாற்றிலே 1976ம் ஆண்டு பொற்காலத்தை தொடக்கி வைத்த ஆண்டு எனலாம். இவரது வேகமும் உற்சாகமும்இ தீர்க்க தரிசனமும் அவசரமாக சரியான முடிவுகளை மேற்கொள்ளும் மனோ சக்தியும் திறமையும் தன்னம்பிக்கையும் படைத்த அவர் தனது துரித நடவடிக்கைகளினால் பாடசாலை நிர்வாகத்திலும் செயற்பாட்டிலும் உடனடியான பல மாற்றங்களை மேற்கொண்டார்.
இந்த மாற்றங்கள் பொதுவாக மருதமுனை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பல அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதாக இருந்தது. இதுவரை கனவுகளாக இருந்த பல நிகழ்வுகள் நனவுகளாகத் தொடங்கின. அந்த வகையில் பதவியேற்ற ஆண்டே ழு மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யப்பட்டனர். இவ்வாண்டில் முன்னொருபோதும் காணாத பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன.

1977ம் ஆண்டு பனிரெண்டு மாணவர்களுடன் கலை, வர்தக உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. உயர்தர பரிட்சை பெறுபேறுகள் மிகவும் திருப்தியாகவும் பல மாணவர்களின் பல்கலைகழக நுழைவிற்கும் இவரிடமிருற்த ஆழுமை மிக்க தலைமைத்துவமும் அர்ப்பணிப்பு வழங்கிய ஆசிரியர் குழுவும் காரணமாக அமைந்தனர். இரண்டு வருடங்களின் பின்னர் விஞ்ஞான வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 17 வருடங்கள் அல்மனாரின் அதிபராக இருந்து மகத்தான பணிபுரிந்தார்.
பாடசாலையின் வளர்ச்சி என்பது கட்டிடங்களிலும் இடவசதியிலும் தங்கியிருக்க வில்லை என்ற உண்மையை உணர்ந்த அதிபரும் ஆசிரியர்களும் பரீட்சைப் பெறுபேறுகளில் பெரும் சாதனைகளை நிலைநாட்ட இரவு பகலாக உழைத்தனர். இதனால் இலங்கையில் பல பாகங்கிளிருந்தும் மாணவர்கள் இப்பாடசாலையை நாடியதுடன் ஆண் மாணவர்களுக்காக விடுதி வசதிகளும் செய்யப்பட்டது.
மாலைநேர வகுப்புகளும் விடுமுறை கால வகுப்புகளும் திட்டமிட்டு விரிவாக நடாத்தப்பட்டன. தொண்டர் ஆசிரியர்கள் பலர் சேவைக்கு அழைக்கப்பட்டனர். இதன் பயனாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சாதாரணதரப் பரீட்சையிலும் உயர்தரப் பரீட்சையிலும் சிறப்பான பெறுபேறுகள் பெற்று இலங்கையின் பல்கலைக் கழகங்களிற்கும் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிற்கும் தெரிவு செய்யப்பட்டனர். இதன் பயனாக மருதமுனையின் கல்விப் புரட்சியை ஏற்படுத்திய பெருமை இவரையே சாரும்.

அவ்வாறே கல்லூரியில் கல்விச் செயற்பாடுகளில் மட்டுமல்ல அதன் புறக்கிருத்திய செயற்பாடுகிளலும் அதிக ஈடுபாடு காட்டினார். கல்லூரியின் கதவு இரவு 10:30 வரை பெற்றாருக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். முழு நேரத்தையும் இரவு பகல் பாராது தன்னை கல்லூரிக்காக அர்ப்பணித்தார். அதில் வெற்றியும் கண்டார்.
அல்மனாரின் பௌதீக கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்குடன் காணியும் சுவீகரிக்கப்பட்டது. இதற்காக இவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். ஆனாலும் 1976ம் ஆண்டு உத்தியோக பூர்வமாக காணிக் கையேற்பு விழாவை நடாத்தி அல்மனாரிற்கு வளம் சேர்த்தார்;.
தமிழ் மொழி தின விழா, ஆங்கிலதின விழா, விளையாட்டுப் போட்டி, முதலுதவி, சாரணியம் மற்றும் சர்வதேச தினங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் முதன் முதலாகவும் குறைந்த வளங்களுடன் அமைச்சு மட்டங்களே பாராட்டும் அளவிற்கு நடாத்தி அதன் மூலம் அல்மனாரை கொத்தணிப் பாடசாலைகளின் தலைமையாக்கினார். அவ்வேளையில் கொத்தணி அதிபராக இருந்து வளங்களை பாடசாலைகளுக்கிடையே பங்கீடு செய்து பல்வேறு வளர்ச்சிகளிலும் கவனம் செலுத்தினார். இதனால் கிழக்கிலங்கையின் தலை சிறந்த கொத்தணி அதிபருக்கான விருதையும் தனதாக்கிக் கொண்டார்.

அல்மனாரின் 1978ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி அல்மனாரை தரைமட்டமாக்கியது. சூறாவளியினால் ஏற்பட்ட மிகப்பெரும் அழிவுகள் அதிபர் அவர்களுடைய பெரு முயற்சியினால் சீர் செய்யப்பட்டு இஅனைத்து கஸ்டங்களும் நீக்கப்பட்டு முன்னேற்றப் பாதையில் வீறு நடைபோடத் தொடங்கியது. இதன் பின்னர் பல புதிய மாடிக் கட்டடங்கள்இ குழாய் நீர் வசதி, சுற்று மதில், மின்சாரம், தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
1992ம் ஆண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு பதவி உயர்வு பெற்றதும் உதவிக்கல்விப் பணிப்பாளராக கல்முனைக்கு மாற்றப்பட்டார். இதுவே இவரது மறக்க முடியாத நிகழ்வாகும். 1993ம் ஆண்டு நடுப்பகுதியில் அக்கரைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரியாகவும் 1995ம் ஆண்டு முதல் ஓய்வு பெறும் வரை பிரதிக் கல்விப் பணிப்பாளாராகவும் பணிபுரிந்தார்.
1985 தொடக்கம் மருதமுனையின் சமாதான சபை தீவிர அங்கத்தவராகவும் 1988 தொடக்கம் அதன் தலைவராகவும் சீரிய பணியாற்றினார். 1992ம் ஆண்டு சமாதான நீதிபதியாக நியமனம் பெற்றார். 1996 தொடக்கம் மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரானார். 1997 தொடக்கம் அரசாங்க ஊழியர்களின் ஒழுக்காற்று விசாரணை அதிகாரியாக நியமனம் பெற்றார். அம்பாரை மாவட்ட அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளராகவும் பணிபுரிந்தார்.

காதி நீதிபதியாக நியமனம் பெற்ற இவர் அப்பணியை சிறப்பாக நிறைவேற்றினார். இவ்வாறு மருதமுனையின் பெரும்பாலான பொதுநல அமைப்புக்களிலும் பிரதேசத்தின் முக்கிய விடயங்களிலும் தீவிர பங்கு கொண்டு உழைத்தார்.

தனது மரணம் வரை அவர் அல்மனாரின் தந்தையாக காலையில் தினமும் கல்லூரிக்கு உரிமையுடன் வருகை தந்து பாடசாலையை சுற்றிப்பார்வையிட்ட பின்னரே தனது வெளிக்கடமைகளை ஆரம்பிப்பார். தனது ஓய்வு காலத்திலும் சமூகத்தைப் பற்றிய சிந்தனையோடு ஒரு இளைஞனைப் போன்று துடிப்புடன் செயலாற்றி வந்தார்.
தூய்மையான எண்ணத்துடன் தனது புகழ், பெருமை, சுயநலன் பாராது சமூகத்தின் எழுச்சிக்காக இவர் ஆற்றிய பணிகள் ஏனையோர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்திருந்தன.

இவரது இத்தகைய உயரிய சேவைகளைப் பாராட்டி 2013ஃ03ஃ09 ஆம் திகதி மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் மருதமுனை சமூகத்தினால் பெரும் கௌரவிப்பு விழாவொன்று நடத்தப்பட்டது. அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இப்பெரு விழாவில் அன்னாரது வாழ்க்கை வரலாறு, கல்வி, சமூகப் பணிகள், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், கல்விமான்களின் ஆசிச் செய்திகள் அடங்கிய ‘இமயம்’ எனும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டமை இங்கு ஞாபகப்படுத்தத்தக்கதாகும்.

அல்-மனார் மத்திய கல்லூரி தனது நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் அதனைப்பயன்படுத்தி கல்லூரிக்குத் தேவையான வளங்கள் முழுவதினையும் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் தனது உத்வேகத்தினால் நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக்குழு ஓன்றினை ஏற்படுத்துவதிலும் முன்னின்று உழைத்தார்.நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக்குழுவின் அதிகாரம் பொருந்திய மீயுயர் சபை ஆலோசகராகவும் இருந்து மிகவும் காத்திரமான பங்களிப்பினை வழங்கினார். அல்-மனார் விழாக்கோலம் காண்பதற்கு முன்னரே மரணம் அவரை நெருங்கியது.
2012.01.27ஆம் திகதி தான் நேசித்த அல்-மனார் மத்திய கல்லூரியின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அன்றிரவே அவரது இன்னுயிர் அவரைவிட்டும் பிரிந்தது. அதனால் அவரது ஜனாசாத் தொழுகை பாடசாலை மைதானத்திலேயே நடாத்தப்பட்டு நல்லடக்கத்துக்காக கொண்டு செல்லப்பட்டது.

இவரது ஜனாசா தொழுகையில் முழு மருதமுனைக் கிராமமும், அயல் கிராம மக்களும், இலங்கையின் பல பாகங்களிலுருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கு பற்றி- இவர்கள் அனைவரும் இவருடைய சேவைகளை பொருந்திக் கொண்டது போன்று எல்லாம் வல்ல இறைவனும் பொருந்திக் கொள்வானாக! அன்னாரது சுபீட்சமான சுவன வாழ்விற்காக அனைவரும் பிரார்திப்போமாக.