பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு
பொலிஸாரினால் மேற்கொள்ளப் பட்டு வரும் விஷேட விசாரணைகளில்
தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களான பொன்னையா செல்வ நாயகம் கஜீபன்
எனப்படும் கோபி அல்லது காசியன் மற்றும் அவரது உதவியாளராக
கூறப்படும் நவரத்னம் நவனீதன் எனப்படும் அப்பன் ஆகியோர் தொடர்பில் தகவல்
வழங்குவோருக்கு ஒரு மில்லியன் ரூபா பணப் பரிசினை பொலிஸ் தலைமையகம்
அறிவித்துள்ளது.
31 வயதான கோபி மற்றும் 36 வயதான அப்பன் ஆகியோர் தொடர்பில் சரியான தகவல்
ஒன்றினை வழங்குவோருக்கே இந்த பரிசுத்தொகை
அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சர் அஜித் ரோகன சுட்டிக்காட்டியதுடன் தகவல் வழங்குவோரின்
இரகசியம் பேணப்பட்டு அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம்
அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி, தர்ம புரம் பிரதேசத்தில் கோபியை கைது
செய்ய விஷேட பொலிஸ் குழுவொன்று சென்றிருந்த நிலையில் உப பொலிஸ்
பரிசோதகர் ரத்ன குமார மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு
அவர் தப்பிச் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து விசாரணைகளைத் தொடர்ந்த
பயங்கர வாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கோபிக்கு பாதுகாப்பு மற்றும்
தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் 50 வயதான பாலேந்திரன்
ஜெயகுமாரியை பயங்கரவாத தடை சட்டதின் கீழ் கைது செய்ததுடன் 18 நாள்
தடுப்புக் காவலின் கீழ் பூசா முகாமில் தடுத்து வைத்து விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரணின் மரணத்தை
தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும்
நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார்
குறிப்பிடுகின்றனர். பொட்டு அம்மானின் கீழ் இயங்கிய விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முக்கிய உறுப்பினராக திகழ்ந்துள்ள
கோபி, 2009 ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது
இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார்.
எனினும் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பிச்
சென்றிருந்த கோபி கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்பு பெற்று
சென்றுள்ளதுடன் அங்கிருந்து நோர்வே சென்று நாடுகடந்த தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் எனக் கூறப்படும் சிவபரனை சந்தித்து
அவரின் ஆலோசனைகளைப் பெற்றுள்ள நிலையிலேயே மீண்டும் இலங்கைக்கு
வந்துள்ளார். இந் நிலையிலேயே அவரை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொன்டுவிட்டு கோபி தப்பிச்
சென்ருள்ளதுடன் அவரை தேடி இராணுவத்தினருடன் இணைந்து பொலிஸார் விஷேட
தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
6 அடி உயரமும் பொது நிற தோற்றத்தையுமுடைய கோபியின் இடது பக்க
உதட்டின் மேல் வெட்டுக்காய அடையாளம் (தழும்பு) ஒன்று
காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் நவரத்னம் நவனீதன் என்ற அப்பன் 5 அடியும் 2 அங்குலமும்
உயரமானவர் எனவும் பொது நிற தோற்றத்தை உடையவர் எனவும் பொலிஸார்
குறிப்பிடுகின்றனர்.
இந் நிலையிலேயே இவர்கள் இருவர் தொடர்பிலும் தலா ஒரு மில்லியன் ரூபா
பணப்பரிசினை அறிவித்துள்ள பொலிஸ் திணைக்களம் தகவல் தெரிந்தவர்கள்
0112451636 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0112321838 என்ர பெக்ஸ்
இலக்கத்தினுடனோ தொடர்பினை ஏற்படுத்தி அல்லது பெக்ஸ் ஊடாக தகவல் வழங்குமாறு
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன
சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.