மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி பொது வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் இன்று புதன் கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
இன்று புதன் கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவகம் மற்றும் (இரும்பு வாணிபம்) ஹாட் வெயார் ஒன்றுமே இவ்வாறு எரிந்துள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை தலைமையிலான பொலிஸ் குழுவினர் தண்ணீர் நிரப்பப்பட்ட 3 பௌசர் வாகனங்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
எனினும் குறித்த கடைகள் இரண்டும் எரிந்துள்ளது. (இரும்பு வாணிபம்) ஹாட் வெயார் விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருகில் உள்ள மரங்களும் கருகியுள்ளது. மன்னார் பொலிஸாரின் துரித நடவடிக்கையின் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புக்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.