இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுகிறோம் – சுஜாத்தா சிங்
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாத்தா சிங்குடன் புதுடில்லியில் நடைபெற்ற விசேட சந்திப்பொன்றில் நியூஸ்பெஸ்டின் அலுவலக செய்தியாளர் கலந்துகொண்டார்.
இலங்கையின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
“தற்போதைய சூழ்நிலை சிறந்த முறையில் அமையவில்லையென்பது எம் அனைவருக்கும் தெரியும். அதேபோன்று, இலங்கை அரசாங்கம் நீண்ட காலம் காணப்படுகின்ற அரசியல் தீர்வுத் திட்டத்தை நோக்கி செல்கின்றமையையும் எமக்கு அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தமிழ் உட்பட அனைத்து இன மக்களுக்கும் ஏற்ப, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகளை எட்டவே இலங்கை முயற்சிக்கின்றது.
இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத் தன்மைக்காக இந்தியா எப்போதும் ஒத்துழைப்புடன் செயற்படும். இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது முக்கியமாகும். இதனையே இந்தியா இலங்கையிடம் வலியுறுத்துகின்றது. 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதற்கு அப்பால் சென்ற செயற்பாடுகள் உள்ளிட்டவைகள் வெளிப்படுத்தப்படும்.
அத்துடன், “நீண்ட கால அரசியல் இணக்கப்பாட்டுக்காக தமிழ் மக்கள் உட்பட ஏனைய இனங்களுக்கான ஒரே நாடு என்ற வகையில் முன்னெடுக்கின்ற இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுகின்றோம். இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்காக முன்வரவேண்டும் என்பதிலும் இந்தியா அவதானத்துடன் உள்ளது. இதனூடாக மாத்திரமே 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அப்பாற்சென்ற அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியும்,” என்றார் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாத்தா சிங்.
0 Comments