(நாச்சியாதீவு பர்வீன்)
மரிச்சிக்கட்டி பிரதேசம் கைநழுவிப்போகும் அபாயம் எழுந்துள்ளது, பாதிக்கப்பட்ட அப்பிரதேசத்து மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மன்னார் முசலி பிரதேசத்திலுள்ள ஹுனைஸ் நகரில் அமைந்துள்ள ஹுனைஸ் பாரூக் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட கேட்போர் கூடத்துடன் வகுப்பறை கட்டிடத் தொகுதிகள் இன்று (14) நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.இதன் போது உரைநிகழ்த்துகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்
கடந்த யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்த இந்தப்பிரதேசத்து மக்களின் காணிகளை அரச வர்த்தமானி அறிவித்தலின்படி வில்பத்து வனத்திற்கு சொந்தமான பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. இந்தவிடயத்தில் அப்பிரதேசத்து பூர்வீக குடிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கிணங்க ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க அவரது செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட உயரதிகாரிகளுடனான சந்திப்பும் முசலி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதன்பிற்பாடு ஜனாதிபதியின் சுயாதீன ஆணைக்குழு இந்தப்பிரதேசத்திற்கு விஜயமேற்கொண்டு இப்பிரதேசத்து மக்களின் உண்மையான நிலவரத்தை கேட்டறியும் நடவடிக்கைகளும், எல்லைகளை மீண்டும் இனங்கண்டு உறுதிப்படுத்தும் நடவடிக்கைளை அண்மையில் மேற்கொண்டதாக அறியக்கிடைத்தது. இதன் போது இந்தப்பிரதேசத்து மக்கள் இந்தவிடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு சரியான தகவல்களை வழங்கத்தவறிவிட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதுள்ளன. எனவே மரிச்சிக்கட்டி,பாலைக்குழி, கொண்டச்சி,கரடிக்குழி ஆகிய பிரதேசங்களில் தமது பூர்வீக நிலத்தை இழந்து வாழ்கின்றவர்கள் தமது முறைப்பாடுகளை விரைவில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பியுங்கள். இந்த விடயத்தில் இந்த பிரதேசத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் கரிசனையுடன் செயற்படுமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியினை பெற்றுக்கொடுப்பத்தில் முன்னிற்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னுமொரு விடயம் இந்தப்பிரதேசத்தில் அநீதியாக இடம்பெற்றுள்ளது. அதாவது எல்லைமீள்நிர்ணயம் தொடர்பில் முசலி பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. எமது விக்கிசாரத்திற்கு ஏற்ப பிரதேச சபை உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்கு புதிய எல்லைப்பிரிப்பானது தடையாக அமைந்துள்ளது. இது தொடர்பில் எமது ஆட்சேபனைகளை நாம் மிகத்தெளிவாக முன்வைத்தும் மீண்டும் அதே தவறு எல்லைப்பிரிப்பில் இடம்பெற்றுள்ளது என்பது அங்கீகரிக்க முடியாத ஒரு விடயமாகும்.
இதுதொடர்பில் பலவாதவிவாதங்களில் நாம் பங்குபற்றியுள்ளோம். மிகக்குறைந்த அதிகாரத்தையுடைய சபையாக இருந்தாலும் அதிலும் நாம் பாதிப்படைகின்றவர்களாக, நம்மை ஆக்குகின்ற நிலவரம் கேள்விக்குற்படுத்தவேண்டியவையே எனவே இந்த பிழையான எல்லை பிரிப்பு தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தி எமக்குரிய சரியான அளவீடுகளை பெற்றுக்கொள்வதில் நாங்கள் அவதானம் செலுத்தவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
இன்று இந்தப்பாடசாலையின் புதிய கட்டிடங்களை மிகவும் நேர்த்தியாகவும், இந்தப்பிரதேசத்தின் சீதோஷண நிலைக்கு ஏற்ற வகையில் மூலப்பொருட்களை பாவித்து கட்டப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் பாதுகாப்பையும்,சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. எனவே யுஎன் ஹெபிட் நிறுவனத்திற்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நானும் பாடசாலைசூழலில் வளர்ந்தவன் என்ற ரீதியில் மாணவர்களுக்கு ஏற்ற கற்கின்ற சூழலினை பாடசாலையின் அமைவு பெற்றுக்கொடுக்கின்றது.
மன்னார் மாவட்டத்தில் முசலி கோட்டத்தில் சுமார் 25 முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதாக அறியக்கிடைத்தது இருந்தும் முசலிக்கோட்டத்தில் கடந்த வருடம் இருவர்தான் சித்தியடைந்துள்ளார்கள் என்று கோட்டைக்கல்விப்பணிப்பாளர் கூறுகின்றார். மீள்குடியேற்ற கிராமங்களில் நிலவுகின்ற பெரும் பிரச்சினை இதுவாகும். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தாம் வாழுகின்ற பிரதேசத்தில் வசதிவாய்ப்போடு வாழுகின்ற போது அவர்களது பிள்ளைகளை தரமான பாடசாலைகளில் கற்பிக்கின்றனர். அத்தோடு திறமையான மாணவர்களும் அங்கயே தங்கிவிடுகின்றனர் எனவே இங்கு நல்ல பெறுபேறுகளை பெறுவதிலும் திறமையான மாணவர்களை உருவாக்குவத்திலும் நடைமுறைச்சிக்கல் இருக்கிறது.
எதிர்காலத்தில் இவ்வாறான தடைகளை தாண்டிய கல்விச்சமூகமொன்று இந்தப்பிரதேசத்தில் உருவாக்குவதை நாம் இணைந்து உறுதிசெய்ய வேண்டும். கல்வியுள்ள ஒரு சமூகமே எதிர்காலத்தில் நல்ல முறையில் இருக்கும். எனவே இந்தப்பிரதேசத்தில் அவ்வாறான ஒரு சமூகத்தை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்வோம் என்றார்
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் ஐக்கிய நாடுகள் மானிட வதிவிட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத்தொகுதிகளின் திறப்புவிழா நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலிப் பாவா பாறுக் மன்னார் மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செபஸ்ர்டியன், UN ஹெபிடாட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


0 Comments