Advertisement

Main Ad

பாகிஸ்தானில் குவெட்டா நகரில் பயங்கர குண்டுவெடிப்பு 11 பேர் பலி

கராச்சி,


பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் குலிஸ்தான் சாலையில் போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் உள்ளது. அந்தப் பகுதியில் நேற்று காலை பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அந்த சத்தம், நகரமெங்கும் எதிரொலித்தது.

இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர். சம்பவ பகுதியை சுற்றி வளைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகளில் குவெட்டா சிவில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே பயங்கர குண்டுவெடிப்பு நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக அமைந்துள்ளது.

இதுபற்றி போலீஸ் டி.ஐ.ஜி., அப்துல் ரசாக் சீமா கூறும்போது, “இந்த தாக்குதல்பற்றி இப்போது எதுவும் கூறுவதற்கு இல்லை. விசாரணை நடந்து வருகிறது. சுஹதா சவுக் பகுதியில் ஒரு காரை நிறுத்த பாதுகாப்பு அதிகாரிகள் முயற்சித்தனர். அடுத்த சில நிமிடங்களில்தான் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இருப்பினும், கார்தான் குண்டுவெடிப்புக்கு காரணமா என்பதை இப்போது கூற இயலாது” என தெரிவித்தார்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்த 11 பேரில் 4 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவார்கள். படுகாயம் அடைந்தவர்களில் 9 பேர் பாதுகாப்பு படை அதிகாரிகள் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்த குண்டுவெடிப்புக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

Post a Comment

0 Comments