(குவாஹத்தி நகரிலிருந்து பரீத் ஏ.றகுமான்)
இந்தியாவின் குவாஹத்தி நகரில் இடம்பெற்று வரும் 12 தெற்காசிய விளையாட்டு போட்டியில் இன்று இடம்பெற்ற போட்டிகளில் இலங்கைக்கு 3 தங்கப்பதக்கங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் ஹிமாஷ எஷான் 10.26 செக்கன்களில் ஓட்டத் தூரத்தை கடந்ததன் மூலம் தங்கப்பதக்கத்தை பெற்றார். இவர் தெற்காசியாவின் அதிவேக ஒட்டவீரர் என்பதை மற்றுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளார். இதே பிரிவில் மொஹமட் அஷ்ரப் 10.69 செக்கன்களில் ஓடி வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.
அத்துடன் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் ஓட்டப்போட்டியில் ஹிமாஷ எஷான் 10.26 செக்கன்களில் ஒடி முடித்தார்.
1999ம் ஆண்டு அவர் நிலைநாட்டப்பட்ட, இலங்கையின் உள்ளக சாதனையாகக் காணப்பட்ட இதுவரை முறியடிக்கப்படாத, இலங்கை வீரர் சிந்தக்கவின் 100மீற்றர் தகுதி காண் ஓட்டப்போட்டியின் 10.29 செக்கன் எனும் சாதனையை 17 வருடங்களுக்கு பின்னர் எஷான் முறியடித்துள்ளார். அத்துடன் இது தெற்காசிய சாதனையாகவும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
பெண்களுக்கான 100மீற்றர் ஓட்டப்போட்டியில் ருமேஷிக்கா ரத்நாயக்க 11.60 செக்கன்களில் ஓடி தெற்காசிய சாதனையை நிலைநாட்டியதோடு தங்கப்பதக்கத்தையும் பெற்றார். இவர் 11.71 செக்கன்களில் அத்தூரத்தை கடந்தார்.
மேலும் ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் மஞ்சுள குமார 2.17 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கே.எல்.ஏ நிமாலி லியானாராச்சி 2.09.40 நிமிடங்களில் போட்டித் தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை பெற்றதோடு, இதே போட்டியில் ஜீ.ரி.ஏ. அபேரத்ன வெள்ளிப்பதக்கத்தை பெற்றார்.
அத்துடன் பெண்களுக்கான 50 மீற்றர் (பின்நோக்கி) நீச்சல் போட்டியில் கிமிக்கோ ரஹீம் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார். அவர், சாக் போட்டிகளில் இலங்கைக்காக மொத்தமாக 4 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதேவேளை பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் இலங்கை வீராங்கனை டபிள்யு.ரி.கே. பெனாண்டோ 14.87 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை பெற்றுள்ளார்.
இலங்கை அணிக்கு வில்வித்தை போட்டியில் வெள்ளிப்பதக்கமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்ததோடு, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் எல்.ஏ.டி.ஈ.பி. அலன்சன் 46.38 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான நீளம் பாய்தலில் எஸ்.எல்.எஸ் சில்வா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். அத்துடன் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் யு.கே.என் ரத்நாயக்க 17:00:85 நிமிடங்களில் ஓடி வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.
அதன் அடிப்படையில், இலங்கைக்கு 17 தங்கம், 35 வெள்ளி, 31 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
பதக்க பட்டியல்
அணி | தங்கம் | வெள் | வெண் | மொத்தம் | |
---|---|---|---|---|---|
இந்தியா | 76 | 36 | 10 | 122 | |
இலங்கை | 17 | 37 | 33 | 87 | |
பாகிஸ்தான் | 5 | 12 | 20 | 37 | |
பங்களாதேஷ் | 3 | 8 | 27 | 38 | |
நேபாளம் | 1 | 5 | 13 | 19 | |
ஆப்கானிஸ்தான் | 0 | 2 | 5 | 7 | |
பூட்டான் | 0 | 1 | 4 | 5 | |
மாலைதீவு | 0 | 1 | 1 | 2 |
0 Comments