தபால் திணைக்களத்தில் 2000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.
இதன் காரணமாக தபால் பொதிகளை மக்களுக்கு விநியோகிப்பதில் தாமதம் நிலவியுள்ளதாக அந்த தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக மத்திய தபால் பரிமாற்றத்தில் பெருந்தொகையான பதிவுத் தபால்கள் தேங்கிக் கிடந்தமைக்கும் இந்த நிலைமையே காரணமென அவர் சுட்டிக்காட்டினார்.
தபால்களை விரைவில் பொது மக்களுக்கு விநியோகிப்பதற்கான நிரந்தர தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகும் என்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
பதவி வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவரவுள்ளதுடன், இந்த பரீட்சையின் மூலம் 563 ஊழியர்களே திணைக்களத்திற்கு சேர்த்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
குறைந்தபட்சம் 1000 ஊழியர்களாவது சேர்த்துக்கொள்ளப்படும் பட்சத்தில் தபால் சேவையில் நிலவும் குறைபாடுகளை ஓரளவிற்கேனும் நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீமிடம் வினவியபோது, திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் கிரமமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்கத்தினூடாக 3 ஆம் நிலை ஊழியர்களை சேர்த்துக்கொள்வதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 578 ஊழியர்களை தபால் திணைக்களத்திற்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் அப்துல் ஹலீம் கூறினார்.
எஞ்சியுள்ள பதவி வெற்றிடங்களுக்காகவும் ஊழியர்களை மிக விரைவில் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments