வில்பத்து பிரதேசத்தில் தொடர்ந்து காடழிப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் என்பதாலேயே இன ரீதியில் அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாக தெரிவித்த அவர், சரணாலய பிரதேசத்தில் காடழிப்பு இடம் பெறவில்லை எனவும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு தமது சொந்த இடங்களுக்கு செல்ல உரிமையிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்ந்து காடழித்து வருகிற போதும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு பாராளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
வில்பத்துவிற்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் என்பதாலே அவர் மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்படுகிறது. பல்லாயிரம் முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் துரத்தப்பட்டார்கள். அகதிகளாக வேறு இடங்களில் வாழ்ந்த அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இவர்களை வரவேண்டாமென அமைச்சர் ரிசாதினால் தடுக்க முடியாது. தெற்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு எமது மக்கள் வெளியேறியிருந்தாலும் இவ்வாறு திரும்பி வந்திருப்பார்கள்.
வில்பத்து சரணாலய பகுதி அழிக்கப்படவில்லை. அமைச்சர் ரிசாத் முஸ்லிம் என்பதாலே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்படுகிறது.
நான் காணி அமைச்சராக இருந்த போது இதேபோன்று நுவரெலியா பகுதியில் 200 மீற்றர் சரணாலய பிரதேசத்தை பெற்று மக்களை மீள்குடியேற்றினேன். வனவள அதிகாரிகளுடன் இணைந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வில்பத்துவிலும் சரணாலயத்தில் ஒரு பகுதியிலே மக்கள் குடியேற்றப்படுகின்றனர். இது ஏனைய பகுதிகளிலும் இடம்பெறுவது போன்றே மேற்கொள்ளப்படுகிறது என்றார்.