கற்றுக்கொள்ளும்போது கற்றல் விடயங்கள் ஒரு கசப்பாக இருக்கும் கற்றபின் அது இனிப்பாக இருக்கும். நாம் எமது கற்றல் விடயங்களில் ஈடுபடும்போது கசப்பாக இருக்கயிருக்க எமது கல்விகற்றல் விடயங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். அப்போதுதான் எமது எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
மருதமுனை அல் மனார் வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா பாடசாலையின் அதிபர் எம்.எம்.கிருபாகன் தலைமையில் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு அங்கு உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடரந்தும் தெரிவிக்கையில்,
இப்பாடசாலையின் அபிவிருத்திக்காக 5 இலட்சம் ரூபாவினை எனது 2016 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் வழங்குவேன். அத்துடன் மாணவர்களுக்காக திறந்து வைக்கப்படுகின்ற பல் சிகிச்சை வைத்திய பிரிவுக்கு ஒரு வைத்தியரையும், அதற்கான ஆளணியையும் நான் வழங்குவேன் என்ற நற்செய்தியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவைகள் யாவும் மாணவர்களின் நலன் கருதியே மேற்கொள்கின்றேன். அதை மாணவர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். அந்தவகையில், மாணவர்களாகிய நீங்கள் உங்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற இடம் பாடசாலையாகும். எமது பாடசாலை காலத்தை வீணாகவும் விளையாட்டாகவும் செலவிடக்கூடாது. எமது எதிர்கால வாழ்கையை முன்நிறுத்தி அதற்கான குறியை வைத்துக்கொண்டு எமது கற்றல் விடயங்களில் அதிகமான ஈடுபாடுகளை காட்டவேண்டும்.
உங்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற முதலாவது படிக்கு நீங்கள் நாளை மறுதினம் கால் எடுத்து வைக்கப்போகின்றீர்கள். அதுதான் க.பொ.த சாதாரண தர பரீட்சையாகும். இப்பரீட்சையை திறன்பட எழுதி அதில் சித்தியடைவதற்கான சகல கல்வி நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கவேண்டும். இப்பாடசாலையில் கல்விகற்றவர்களில் அதிகமானோர் இன்று வைத்தியத்துறையில் வைத்திய நிபுணர்களாகவும், இலங்கை நிருவாக சேவைகளிலும், கணக்காளர்களாகவும், பொஸிஸ் திணக்களத்திலும், சட்டத்துறைகளிலும் இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றார்கள்.
மருதமுனை கிராமம் இன்று தேசிய ரீதியாக பேசப்பட்டு வருகின்ற கிராமமாக சிறந்து விளங்குகின்றது. இக்கராமத்தை எதிர்காலங்களிலும் தேசிய ரீதியாக பேசப்படும் கிராமமாக தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றார்.