Advertisement

Main Ad

கோறளைப்பற்று மேற்கு குப்பை கூழங்களினால் பொது மக்கள் பாதிப்பு-நடவடிக்கை எடுக்குமாறு KCDA அரச அதிபரிடம் கோரிக்கை


வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளினால் கொட்டப்படும் குப்பை கூழங்களினால் யானைகள் அப்பிரதேசத்தில் அட்டகாசம் புரிவதாகவும், அதன் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் மட்டு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

Mrs. P.S.M.சார்ள்ஸ்
அரசாங்க அதிபர், மாவட்ட செயலாளர்,
மாவட்ட செயலகம்,
மட்டக்களப்பு.


வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் குப்பை கூழங்களினால் அட்டகாசம் புரியும் யானைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் மியான்குள காரைமடு பிரதேச வீதியில் யானைகளின் அட்டகாசம் மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதோடு, இதற்கு இரண்டு வகையான காரணங்களை குறிப்பிடலாம்.
1. கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினால் அப்பகுதியில்       நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பை கூழங்கள்.
2. யானைகள் தங்கி நிற்கக்கூடிய வகையில் வீதியோரங்களை அன்மித்த பகுதியில் வளர்ந்து காணப்படும் பற்றைக்காடுகள்.
இவ்வீதி மியான்குள பிரதான வீதியிலிருந்து காரமுனை கிராமத்திற்கு இடைப்பட்ட தூரம் 4 கிலோமீட்டர்களாகும்.
இவ்வீதியில் விவசாயிகள், மீன்வர்கள், பண்ணை தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப்பலரால் இரவு பகலாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வீதியாக இது காணப்படுகின்றது.
இவ்வீதியின் ஒரு அங்கமான மியான்குள காரைமடு பிரதேச வீதியில் மேற்குறிக்கிட்ட இரு பிரதேச சபைகளினாலும் ஒழுங்கற்ற முறையில் கொட்டப்படுகின்ற குப்பை கூழங்கள் பொது மக்கள் பயணிக்கும் வீதியோரங்களில் கொட்டப்படுவதால் இக்குப்பைகளைத் தேடி வருகின்ற யானைகளே மனிதர்களுக்கு தீங்கினை விளைவிப்பதோடு, இவ்வீதியால் பயணிக்கும் பொது மக்கள் அன்றாடம் தங்களின் உயிர்களைப் பணயம் வைத்தவர்களாக தங்களின் போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர்.
இதன் தாக்கமாக 2015.10.28ஆந்திகதி புதன்கிழமை பி.ப. 3.00 மணியளவில் ஓட்டமாவடியிலிருந்து தனது குடியிருப்புக் கிராமமான காரமுனைக் கிராமத்திற்குச் செல்லும் வழியில் மியான்குள காரைமடு பிரதேச வீதியில் வைத்து ஓட்டமாவடி மௌலானா வீதியைச் சேர்ந்த மையன் பாவா ஹனீபா (வயது 57) என்பவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறையற்ற குப்பை கொட்டுதலாலும், வீதியோரங்களில் அண்மித்து வளர்ந்து காணப்படும் பற்றைக்காடுகளாலும் இன்று ஓர் உயிர் பறிகொடுக்கப்பட்டுள்ளது.
அத்தடன், அண்மையில் (2015.10.10ஆந்திகதி சனிக்கிழமை) தங்களால் மட்டக்களப்பு-போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எல்லைக்கிராமத்தில் மக்களை அச்சம் காட்டி அட்டகாசம் புரிந்த வந்த காட்டு யானையொன்றினைப் பிடிப்பதற்கு தங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கதோடு, அச்செய்தியினை இணையத்தளங்கள் மற்றும் பத்திரிக்கை வாயிலாக மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டதாகக் காணப்பட்டது.
மேற்படி விடயத்தில் இது மாதிரியான அணுகுமுறையை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
எனவே, மேலே குறிப்பிட்ட இரு விடயங்களையும் தங்களின் மேலான கவனத்திற்கொண்டு பொது மக்களின் நலன்கருதி தங்களினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
உண்மையுள்ள

தலைவர் / செயலாளர்
கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் (KCDA)

பிரதி :

பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், கோறளைப்பற்று வடக்கு, வாகரை.