சிரியாவின் ரக்காநகரில் பிரான்ஸ் விமானப்படை சரமாரியாக குண்டுகளை வீசிவருகிறது என்று தகவல்கள் வெளியாகிஉள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாரீஸ் நகரின் 6 முக்கிய இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 125–க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர். இதனால் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே உறுதி பூண்டு இருக்கிறார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆட்சேர்ப்பு மையம் மற்றும் முகாம் மீது நேற்று முன்தினம் பிரான்ஸ் போர்விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
ஜோர்டான் மற்றும் அமீரகத்தில் இருந்து கிளம்பிச் சென்ற பிரான்ஸ் நாட்டின் போர்விமானங்கள் முதல் இலக்காக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் மையம் மற்றும் அவர்களின் ஆயுத கிடங்குகள் மீது குண்டுகளை வீசின. இதைத்தொடர்ந்து அதே பகுதியில் இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயற்சி முகாம்கள் மீதும் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் ஆட்சேர்ப்பு மையம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது என்று கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
இதற்கிடையே சிரியாவின் ரக்காநகரில் பிரான்ஸ் விமானப்படை சரமாரியாக குண்டுகளை வீசிவருகிறது என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. பிரான்ஸ் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் எத்தனைபேர் பலியாகினர் என்பது தொடர்பாக உடனடி தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அமெரிக்க விமானப்படையும், பிரான்சுக்கு உதவியாக குண்டுகளை வீசிஉள்ளது என்று தெரியவந்து உள்ளது.