வேலியொன்றில் சிக்கிக்கொண்ட நாயொன்று மீட்கப்படும்வரை மற்றொரு நாய் 2 தினங்களாக அதன் அருகிலேயே காத்திருந்து பலரை நெகிழச் செய்துள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரைச் சேர்ந்த அதீனா எனும் நாயின் கால் வலைக்கம்பியொன்றில் சிக்கிக்கொண்டது.
அந்த நாய் அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்த நிலையில் அதன் நண்பனான ரெக்ஸ் சுயஸ் எனும் நாய், அவ்வேலிக்கு அருகிலேயே நின்று கொண்டது.
தனது நண்பி மீட்கப்படும்வரை ரெக்ஸ் சுயஸ் அங்கிருந்து நகரவில்லை. இரு தினங்களின் பின் அட்லாண்டா மிருகப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் அதீனா மீட்கப்பட்டது.
இதன்போது, ரெக்ஸ் சுயஸ் எனும் நாயும் இரு தினங்களாக அவ்வேலிக்கு அருகிலேயே இருந்ததை அறிந்து தாம் வியப்படைந்ததாக அட்லாண்டா மிருகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இவ்விரு நாய்களும் மிருகப் பாதுகாப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது அதீனா எனும் நாய் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.