நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழுள்ள 6ஆம் கொளனி அல் - தாஜூன் பாடசாலை வீதி நீண்டகாலமாக ஆழமான குன்றும் குழியுமாக காணப்படுவதினால் பாடசாலை மாணவர்களும் பிரதேச மக்களும் நாளந்தம் பயணிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வீதியானது சொறிக்கல்முனை -03 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ் வீதியானது அல்- தாஜூன் பாடசாலை, மிலேனியம் பாலர் பாடசாலை, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்வதற்காக பிரதேச மக்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகின்றது.
மழை காலங்களில் நீர் நிரம்பி வீதியின் மேலாக பாய்வதினால் வீதி முற்றாக சேதடைந்து பாடசாலை மாணவர்கள் வீதியால் பயணிக்கும் போது விழுந்து காயங்களுக்கு உட்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவிடயம் தொடர்பாக நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் பிரதேசத்தின் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கவனிப்பாரற்று காணப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்.
இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் துரித கவனம் செலுத்தி குறித்த வீதியை புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.