யுத்தம் முடிந்து 06 ஆண்டுகள் கடந்தும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்க்கப்பட்டு, நீண்டகாலமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வாழுகின்ற மக்கள் இதுவரை மீள்குடியேற்றப் படாமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் விசனத்தைத் தெரிவிப்பதோடு , 1990ஆம் ஆண்டு இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை, தங்கள் பூர்வீக இடங்களில் மீளக்குடியேற்றுவதற்கு பொருத்தமான தேசிய மீள்குடியேற்றக் கொள்கையொன்றினை உடனடியாக நிறைவேற்றி நடைமுறைப்படுத்துமாறு, அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது.
இதுதொடர்பில், அழிந்துகிடக்கின்ற பொது உட்கட்டமைப்பு வசதிகளை சீர் திருத்தி சுயமான மீள்குடியேற்றத்தினை ஊக்குவிப்பதோடு அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசாரங்களைப் பேணுவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்துமாறு, அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை புலன்விசாரணை செய்வதற்கும், அவர்களுக்கு நீதிவழங்குவதற்கும் உருவாக்கப்படும் பொறிமுறைக்கு குறைந்தபட்சம் 1985 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலப்பகுதி உள்ளடக்கப்படவேண்டுமெனவும் மேலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பலதரப்பட்ட காணி உரித்துப் பிரச்சினையை அவசரமாகத் தீர்த்துவைப்பதற்கு, வெளிப்படைத்தன்மை கொண்ட பொறிமுறையொன்றினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் .
மேலும் சிலாபத்துறை ,கருமலையூற்றுப்பள்ளி மற்றும் அஷ்ரப்நகர் உள்ளிட் பிரதேசங்களில் பாதுகாப்புப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் உரித்துக் காணிகளையும், அங்குள்ள அரச அனுமதிப்பத்திர உரித்துக் காணிகளையும் இழந்த முஸ்லிம்களுக்கு, மீண்டும் அக்காணிகளின் உரிமைகளை வழங்குவதோடு, அவ்வுடமைகள் மீளளிக்கப்பட வேண்டுமெனவும் அரசாங்கத்தை வலியுறுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தனது 26 வது பேராளர் மாநாட்டில் தீர்மானம் மேற்கொண்டுள்ளது .