Advertisement

Main Ad

சவூதியில் ஷியாக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேர் பலி

சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் ஷியாக்கள் கூடியிருந்த கூட்டத்தில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்; ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் என சவூதியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று, சவூதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சாய்ஹாட்டில் இந்தத் தாக்குல் சம்பவம் நடந்துள்ளது. ஷியா முஸ்லிம்களுக்கு புனிதமான நிகழ்வாகக் கருதப்படும் அஷுராதினம் துவங்கி இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
துப்பாக்கிதாரி ஒருவர் கூடியிருந்தவர்கள் மீது திடீரென சரமாரியாகச் சுட்டதாகவும் காவல்துறையினர் அந்தத் துப்பாக்கிதாரியைச் சுட்டு வீழ்த்தியிதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இஸ்லாமிக் ஸ்டேட் - பஹ்ரைன் ஸ்டேட் என்று அழைத்துக்கொள்ளும் குழு ஒன்று தங்களது வீரர்கள்தான் "சமயநம்பிக்கையற்ற ஷியா கோவில்" மீது தானியங்கி ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
"மொஹம்மட்டின் தீவில் சமய நம்பிக்கை அற்றவர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள்" என்றும் அந்தக் குழு எச்சரித்துள்ளது.
தற்போது சவூதி அரேபியாவில் இருக்கும் சில பகுதிகளும் முன்பு பஹ்ரைன் நாட்டோடு இருந்தது. இந்தக் குழுவின் பெயர், இந்த வரலாற்று பின்புலத்தையே குறிப்பிடுவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல, சவூதியின் கிழக்குப் பகுதியில் ஷியா சமூகத்தினருக்கு எதிராக வெள்ளிக்கிழமையன்று மாலையில் வேறு சில சிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சவூதியில் இருக்கும் ஷியா சமூகத்தினர் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுவருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் எண்ணெய் வளம் அதிகமுள்ள கிழக்குப் பகுதியில் வசிக்கிறார்கள். தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர்.
கடும்போக்கு சுன்னிகளைப் பொறுத்தவரை ஷியாக்களை, நம்பிக்கைக்கு முரணானவர்களாக கருதுகின்றனர்.
அஷுரா தின நிகழ்வுகளின்போது, இறைத்தூதர் மொஹம்மட்டின் பேரனான ஹுசைனின் மறைவை ஷியாக்கள் நினைவுகூர்கின்றனர்.
சிரியாவிலும் இராக்கிலும் ஐஎஸ்ஸுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டமைப்பில் சவூதியும் அங்கம் வகிக்கிறது. இதன் காரணமாக, ஐஎஸ் குழுவின் அச்சுறுத்தலுக்கு சவூதி அரேபியா ஆளாகியுள்ளது.