Advertisement

Main Ad

கொட்டகலை கற்குவாரியின் அனுமதி பத்திரம் இரத்து - கற்குவாரியினால் அனர்த்தம் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிப்பு


திம்புள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தை அண்மித்த மலைப்பகுதியில் அமைந்துள்ள கற்குவாரியினால் தோட்ட உதவி கண்காணிப்பாளரின் உத்தியோகபூர்வ இல்லம் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

குறித்த இந்த இல்லத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள தவறனையும் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதோடு, அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் தற்காலிகமாக பணியில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

கற்குவாரியில் வெடி வைத்து கற்பாறைகள் தகர்க்கப்படும் போது கற்கள் சிதறி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தோட்ட உதவி கண்காணிப்பாளரின் இல்லம் மற்றும் தவறனையில் விழுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, மலையிலும் வெடிப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கற்குவாரியின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு தோட்ட உதவி கண்காணிப்பாளர் விடுத்திருந்தார். இதனை கருத்திற் கொண்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை குறித்த கற்குவாரிக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் ஆய்வுகளை முன்னெடுத்த மத்திய சுற்றாடல் அதிகார மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கற்குவாரியின் செயற்பாடுகளால் ஆபத்து இருப்பதை உறுதி செய்திருந்தனர்.

மேலும் கற்குவாரி அமைந்துள்ள மலையின் அடிவாரத்திலேயே கொட்டகலை மேபீல்ட் தோட்டம் உள்ளிட்ட பல தோட்டங்களுக்கு செல்வதற்கான பிரதான வீதியும் அமைந்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு ஆபத்துகளை தடுக்கும் வகையில், கற்குவாரியின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திம்புளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.