தமிழ் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா, இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் படையினர் தமிழ்ப் பொதுமக்களை பாதுகாத்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கொன்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்களுக்கு பிரவேசிக்க முயற்சித்த பொது மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்றனர் எனவும் மறுபுறத்தில் தமிழ் மக்களை வரவேற்று அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவதில் படையினர் சிரத்தைக் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி 150,000 பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசித்ததாகவும், பின்னர் மே மாதம் 14ம் திகதி 85000 பேர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரசாங்கப்படையினர் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தறிற்கு வந்ததாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதுடன் 2008ம் ஆண்டு இறுதிப் பகுதியிலும் 2009ம் ஆண்டு ஆரம்பத்திலும் பொதுமக்களை புலிகளிடமிருந்து மீட்க படையினர் முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னரங்கப் பகுதிகளிலிருந்து 4-5 கிலோ மீற்றர் தூரத்தில் பொதுமக்களை புலிகள் நிறுத்தியதாகவும், பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி படையினரின் தாக்குதல்களை தவிர்க்க புலிகள் முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னரங்கப் பகுதிகளுக்கு 4-5 கிலோ மீற்றர் பின்னால் பொதுமக்கள். நிலைநிறுத்தப்பட்டால் அவர்களை மீட்பது இயலாத காரியமாகும்.
மக்களை மீட்பதற்கு படையினர் எடுத்த முயற்சிகளை பல்வேறு வழிகளில் புலிகள் தடுத்ததுடன், பொதுமக்கள் முட்டாள்கள் அல்ல முடிந்தளவு அவர்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேறிச் செல்லவே முயற்சித்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களை குவித்து அவர்களை மனித கேடயமாக பயன்படுத்திக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளே முயற்சித்தகாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

