சைனாய் தீபகற்பத்தில் சர்வதேச விதிகளுக்குப் புறம்பாக வீடுகள், பிற கட்டங்கள் என 3,255 கட்டங்களை எகிப்து இடித்துள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டில் காஸா எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வீடுகளை இடித்துத்தள்ளும் வேலைகளை எகிப்தியப் படைகள் துவங்கின.
எகிப்திற்கும் காஸாவுக்கும் இடையில் மோதலற்ற பகுதியை உருவாக்கவும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் சுரங்கங்களை அழிக்கவும் இந்த நடவடிக்கையை எகிப்து மேற்கொண்டது.
ஆனால், இந்த நடவடிக்கையின் மூலமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஏதும் அளிக்கப்படவில்லை; தற்காலிக குடியிருப்பும் தரப்படவில்லை என ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
இந்த இடிப்பு நடவடிக்கைகளை குடியிருப்புவாசிகள் ஆதரித்ததாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
எகிப்தின் அதிபராக இருந்த முஹம்மது மோர்சி ஜூலை 2013ல் ராணுவத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் குழுவோடு தொடர்புடைய ஜிகாதிக் குழுக்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.
காஸா எல்லையை ஒட்டி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு, எல்லா கட்டடங்களையும் ராணுவம் அழித்திருக்கிறது. இதற்கென வெடிகுண்டுகளும் புல்டோசர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.