நேற்றைய தினம் இலங்கை பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கிடையிலா விளையாட்டுப் போட்டியின் போது அரங்கின் ஒரு பகுதியில் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக ஆட்டம் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர் (பாக்) தன்னை நோக்கி கல் வீசப்பட்டதாக முறையிட்டிருந்த நிலையில் அங்கு கைகலப்பு இடம்பெறுவது அவதானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கல்வீச்சு அரங்கின் பின்புறமாகவும் இடம்பெற்றதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் உட்பட பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தன. எனினும் அவ்வாறு பள்ளி மீதோ முஸ்லிம்களை இலக்கு வைத்தோ தாக்குதல்கள் இடம்பெறவில்லையென குறிப்பிட்ட தருவாயிலேயே பள்ளி நிர்வாகம் சார்பாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மைதானத்திற்குள் இடம்பெற்ற கைகலப்பின் போது எடுக்கப்பட்ட காணொளியொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
விளையாட்டின் வெற்றி தோல்விகளை ஏற்றுக்கொள்ள இலங்கை ரசிகர்கள் பழக வேண்டும் என சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரபலங்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் இனவாத சர்ச்சைகளைத் தூண்டக்கூடிய சந்தர்ப்பங்களும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானத்துடன் கையாள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டிக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தையடுத்து அங்கு கலகத் தடுப்பு பொலிசார் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தமையும் 45 நிமிட இடைநிறுத்தத்தின் பின் ஆட்டம் தொடரப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

