தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் குறைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக விளக்கமளிப்பதற்கு கால அவகாசம் பெற்றுத்தருமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைக்குமாறு கோரி நவசமாஜ கட்சியின் வேட்பாளர் சேனைக்க பெரேரா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் ஜனாதிபதி சார்பில் இந்த வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டதாக மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் செனக பெரேரா தெரிவித்தார்.
இந்த வேண்டுகோளுக்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதையடுத்து விசாரணை ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவிற்கு 200க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினரும் 20க்கும் அதிகமான வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டிய மனுதாரர் இதன்முலம் பிற வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்படுவதாகத் தெரிவித்தார்.
இதன் முலம் சுதந்திரமான தேர்தலொன்றை நடத்துவதற்கு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் இந்த மனு மூலம் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
எனவே தேர்தல் காலப் பகுதிக்குள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை குறைக்கும்படி உததரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.