(க.கிஷாந்தன்)
சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தான் இ.தொ.கா தொழிலாளர்களை மெதுவாக பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட கோரிக்கை விடுத்தது மாறாக அவர்களை கஷ்டத்தில் தள்ளுவதற்கு அல்ல எனத்தெரிவித்துள்ள இ.தொகா தொழிலாளர்கள் வழமையான பணிகளில் ஈடுபடலாம் என்றும் சம்பள விவகாரத்தை தேர்தலுக்குப்பின்னர் பேசுவதற்கு கம்பனிகள் உடன்பட்டதால் இந்த முடிவுக்கு வந்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.
கொட்டகலையில் 19.07.2015 அன்று மதியம் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இத்தகவல்களை இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இ.தொ.கா பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்துத்தெரிவித்த இ.தொ.கா தலைவர் முத்து சிவலிங்கம் தொழிலாளர்களை கஷ்டத்தின் மத்தியில் தள்ளுவதற்கோ சுயநலத்திற்கோ நாம் போராட்டங்களை முன்னெடுத்த கட்சியல்ல அதை வரலாறு கூறும், அதிக சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்வதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க தொழிற்சங்கங்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது மரபு. இந்த விடயம் பாரம்பரிய தொழிற்சங்க அனுபவம் உள்ளவர்களுக்கே தெரியும் ,புரியும். கட்சி அரசியல் செய்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. எனினும் தேர்தல் காலகட்டங்களில் தொழிலாளர்களை குழப்பியடித்து எமது போராட்டத்திற்கு சேறு பூசும் முயற்சியில் பலர் இறங்கியுள்ளனர்.
ஆகவே நாம் சம்பள விவகாரத்தை தேர்தலுக்குப்பின்னர் பேசலாம் என முடிவெடுத்தோம். இது குறித்து கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து விளக்கினோம் இது ஒரு நல்ல முடிவு என அவர் தெரிவித்தார் .ஆனாலும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எந்த வித தெளிவும் இல்லாத சிலர் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தை விமர்சித்து தொழிலாளர்களை குழப்பியடித்தனர்.
ஒரு சில தோட்டங்களில் எமது தொழிற்சங்கத்தின் பெயரைக்கூறி கலவரங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நாம் அறிவோம். தேர்தலுக்குப்பின்னர் நாம் நிச்சியமாக தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப்பெற்றுத்தருவோம். அதில் எந்தவித சந்தேகங்களும் தேவையில்லை. நாம் எக்கட்டத்திலும் பேச்சு வார்த்தையிலிருந்து வெளியேறவில்லை. கம்பனிகள் கூறிய தொகைக்கு நாம் உடன்பட வில்லை என்பதே உண்மை எனத்தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்கள் மூவரும் நிச்சியமாக வெற்றி பெறுவார்கள். நுவரெலியாவில் இடம்பெறும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வருகை தர ஜனாதிபதியும் இணங்கியுள்ளார். இ.தொ.கா மலையக மக்களுக்கு என்ன செய்தது என்பதை நாம் பட்டியலிட்டுக்காட்டத்தேவையில் லை அதன் சேவையை பெற்றவர்கள் அறிவார்கள்.
கடந்த காலங்களில் நாம் எந்தளவிற்கு சமூகத்திற்கு சேவையாற்றியுள்ளோம் என்பதில் எமது வெற்றி தங்கியுள்ளது. அதன் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்கள் மூவரும் நிச்சியமாக வெற்றி பெறுவர். எமக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. கடந்த வாரம் நாம் ஜனாதிபதியை சந்தித்து சில கோரிக்கைளை முன்வைத்திருந்தோம்.அதில் மலையக பல்கலைக்கழகமும் ஒன்று. அதற்கான இடம் இல்லை என கூறப்பட்டபோது சுமார் 200 ஏக்கர் தேயிலைக்காணி ஒன்றை பெற்றுத்தருகிறோம் எனக்கூறினோம்.
மிகவும் சினேகபூர்வமான கலந்துரையாடலாக அது அமைந்தது. மேலும் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அவர் இணங்கினார். அதற்கான திகதிகளை அறிவிப்பதாக எம்மிடம் கூறினார். நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் வித்தியாசமாக இருக்கலாம் ஆனால் பாராளுமன்ற தேர்தல்கள் என்பது தனித்துவமானது தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் தேர்தல். மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றும் பிரதிநிதிகள் யார் என்பது இம்மாவட்ட மக்களுக்கு நன்கு தெரியும் என்றார்.

