(எம்.எம்.ஜபீர்)
திகாமடுல்ல மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தீர்மானிப்பதற்கான கட்சியின் உயர்பீடக் கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதன்போது கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான வேட்பாளரை தெரிவு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் நான் ஒருமுறையாவது பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும். ஆகையால் இம்முறை சம்மாந்துறைக்கு வேட்பாளராக என்னையே கட்சி நிறுத்த வேண்டும் என ஒரே பிடியில் நின்றமையால் கட்சியின் தலைவரினால் இரண்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தற்போது அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சுப் பதவியையும் மாகாண சபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்து ஐ.எல்.எம்.மாஹிரிற்கு வழங்கப்படல் வேண்டும்
அல்லாவிடின் சம்மாந்துறை தொகுதிக்கு பாராளுமன்ற தேர்தலில் எம்.ஐ.எம்.மாஹிர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சி தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இக்கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர் அங்கம் வகித்த அனைத்து அமைச்சு பதவியையும் மாகாண சபை உறுப்பினர் பதவியையும் உடனடியாக இராஜினாமா செய்து கடிதத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கையளித்தார்.
அதன் பின்னரே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் சம்மாந்துறை தொகுதிக்கான வேட்பாளராக எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வேட்பு மனுக்கள் நாளை அம்பாரை மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

