வேலைவாய்ப்புக்கு மட்டுமல்லாது தகவல் தொடர்புக்கும் ஆங்கில அறிவு அவசியமாகிறது. பள்ளிப்பாடம் முதலே ஆங்கிலம் படித்தாலும், நம்மால் ஆங்கிலத்தை எளிதில் பேச முடியாததற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வொக்கபுலரி (Vocabulary) எனும் பயன்பாட்டு சொற்களின் அறிவு போதாமைதான். அதுவே சில தகவல்கள் தெரிந்தும் முழுமையாக பேச முடியாத தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் தருகிறது. கூடுதல் சொற்களை அறிந்து பயிற்சி செய்வதற்கு சில டிப்ஸ்...
1. தவறாமல் டிக்ஸ்னரி (அகராதி) பயன்படுத்தும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதில் சொல்லுக்கான பொருளை அறிவதுடன், ஒரு சொல்லை பயன்படுத்த வேண்டிய இடத்தில் வேறு எந்தெந்த சொற்களை பயன்படுத்த முடியும் என்பதற்கான அறிவையும் வளர்க்க முடியும்.
2. அக்கம்பக்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான ஆங்கிலச் சொற்களை கவனிக்கவும், நினைவில் ஏற்றவும் வேண்டும். பிரபலமான சொல்லாடல்களை படித்து அறிவது அவசியம்.
3. தெரிந்த சொற்களையும், புதிதாக கற்கும் சொற்களையும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கத் தவறாதீர்கள். குறிப்பாக புதிதாக கற்ற சொற்களை அடிப்படையாக வைத்து பல சொற்றொடர்களை உருவாக்கி பார்க்க வேண்டும்.
4. வேர்ச் சொற்களை தேடி அறிவது சிறந்த பலனைத் தரும். டிக்ஸ்னரி பயன்படுத்துவது, தொடர்ந்து படிப்பதன் மூலமாக இதை அறியலாம்.
5. தினமும் குறைந்தது 5 புதிய வார்த்தைகளையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதி மொழி எடுத்து செயல்படலாம். இதன் மூலம் சில மாதங்களிலேயே அன்றாட பயன்பாட்டிற்கான பெரும்பாலான சொற்களை அறிந்து கொள்ள முடியும்.
6. இணையம் போன்ற தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நமது சேகரிப்பு அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
7. ஒன்றை தொடர்புபடுத்தும் மற்றொரு விஷயம் அல்லது இன்னொரு சொல்லை நினைவில் வைத்துக் கொள்வது நல்ல பலன் தரும்.
8. எல்லாவற்றுக்கும் மேலாக விசாலமாக படிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வது நிறைய 'வொக்கபுலரி'களை உங்கள் வசமாக்கும்.