Advertisement

Main Ad

சம்மாந்துறை வைத்தியசாலையில் நிலவி வரும் ஆளணி, வளப்பற்றாக்குறை தீர்த்துத்தர தயார்-சுகாதார அமைச்சர்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வதும சம்பந்தமான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடனான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் நடைபெற்றது.


இதன் போது கருத்து தெரிவிக்கையில்

சம்மாந்துறை வைத்தியசாலையில் நிலவி வரும் ஆளணி, வளப்பற்றாக்குறை மற்றும் உடனடித்தேவைகளையும் தீர்த்துத்தர எப்பொதும் தயாரகவுள்ளேன். அதற்கானஉத்தேச அறிக்கைகளை சமர்ப்பித்தால், அதற்கான நிதியை சுகாதார அமைச்சின் ஊடாக ஒதுக்கீடு செய்வதற்கு தயாராகவுள்ளேன் என்றும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.

மாகாண சபையின் கீழ் இயங்கிவரும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையை உடனடியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவர முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற அவசியத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலி மற்றும் வைத்திய அதிகாரிகள் குழுவினர் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவிடம் விரிவாக தெரிவித்தனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை 93 வருடங்கள் பழமை வாய்ந்தாகும். இது 1982ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாகவும் 2007ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. சம்மாந்துறை, நாவிதன்வெளி, காரைதீவு போன்ற பிரதேசங்களுக்குட்பட்ட 150,000 மேற்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து வரும்

பிரதான வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை காணப்படுகின்றது. தற்போது இந்த வைத்தியசாலையில் தினமும் வெளிநோயாளர் பிரிவில் 700-800 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பிரதேசத்தில் வாழும் மக்கள் அவசர சிகிச்சைகளுக்காக அம்பாறை மற்றும்
மட்டக்களப்பு போன்ற தூர இடங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாகாண சபை நிர்வாகத்தில் இயங்கிவரும் இவ்வைத்தியசாலையில்
வளப்பற்றாக்குறையுடனும் ஆளணிப்பற்றாக்குறையுடனும் இயங்கிவருவதால், பொதுமக்களுக்கு சீரான சிகிச்சை அளிக்க முடியாத இக்கட்டான நிலையில்
ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.
ஹஸன் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் ஏ.இஸ்ஸதீன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எஸ்.ஏ. அஸீஸ், ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரியும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான எம்.வை.எம்.முஸ்தபா, வைத்திய அதிகாரி
எம்.எஸ்.எம். ரஷீத் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

  ( முகம்மது றுமைஸ் )