Advertisement

Main Ad

புதிய தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மைகளுக்கு பாதிப்பில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் எம்மோடு இந்த விடயமாக அவர் பகிரங்க விவாதத்திற்கு தயாராக வேண்டும்

(எஸ்.அஷ்ரப்கான்)

புதிய தேர்தல்  சீர்திருத்தம் சிறுபான்மைகளுக்கு பாதிப்பில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் அவர்களின் கருத்து முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் நிலை போன்றதாகும். புதிய தேர்தல்  சீர்திருத்தம் சிறுபான்மைகளுக்கு பாதிப்பில்லை என்றால் எம்மோடு இந்த விடயமாக அவர் பகிரங்க விவாதத்திற்கு தயாராக வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
 

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் சீர் திருத்தம் தொடர்பாக முஸ்லிம் கட்சிகள் உட்பட அனைத்து சிறுபானன்மை கட்சிகளும் ஏனைய சிறிய கட்சிகளும் தாம் சார்ந்துள்ள சமூகங்களின் அல்லது தமது கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் பாரதுாரமாக குறைக்கப்படும்  என்கின்ற அடிப்படையில் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றபொழுது இதே நிலைப்பாட்டை பல பொது ஸ்தாபனங்களும்  தெரிவித்து வருகின்றன. அதே நேரம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் மாத்திரம் எவ்வாறு சிறுபான்மைகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை என்று தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முற்படுவது போன்ற ஒரு செயற்பாடாகும். யாருக்காக இவ்வாறு பேசுகின்றார் என்பது புரியவில்லை. அல்லது என்ன உள் நோக்கத்திற்காக இவ்வாறு அவர் இரவைப் பகல் என்று குறிப்பிடுகின்றார் என்று புரியவில்லை. அவரால் முடிந்தால் ஒரு பொது விவாதத்திற்கு வந்து இந்த புதிய தேர்தல் முறையினால் சிறுபான்மைகளுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் எதுவித பாதிப்பும் இல்லை. ஆசனங்களில் குறைவு ஏற்படாது. என்று நிரூபிக்க முடியுமா ? என்று கேட்க விரும்புகின்றோம். அவ்வாறு அவர் நிரூபித்தால் இச் சீர் திருத்தத்திற்கு முதலாவது ஆதரவு வழங்குகின்ற கட்சியாக எமது கட்சி இருக்கும். 

சட்டத்தரணி சுஹைர் மீது  நான் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் இவ்வாறு தொடர்ச்சியாக கூறுவது   கவலையளிக்கின்றது. இரட்டை வாக்குகள் அறிமுகப்படுத்தினால் சிறுபான்மைகளினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும் வாக்குகள் பெரும் பான்மை கட்சிகளுக்கு செல்வது குறைந்துவிடும் என்று பெரும்பான்மை கட்சிகள் அச்சப்படலாம். ஆனால் அது ஏன் சட்டத்தரணி சுஹைர் அவர்களுக்கு கவலையளிக்கின்றது என்பதுதான் புரியவில்லை. 
 
எனவே, சட்டத்தரணி சுஹைர் அவர்கள் இத் தேர்தல் சீர் திருத்தம் தொடர்பான கணக்குகளை எடுத்துக்கொண்டு ஒரு பொது விவாதத்திற்கு அவசரமாக வந்து தனது நிலைப்பாட்டை நிறுவுமாறு நாம் வேண்டுகின்றோம். எங்கு எப்பொழுது இந்த விவாதத்தை நடத்தலாம் என்பதை அவர் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யலாம் என்று தெரிவிப்பதோடு விரும்பினால் அவர் அந்த விவாதத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு எம்மை அழைத்தாலும் நாம் செல்லத் தயாராக இருக்கின்றோம். காலம் தாழ்த்தாமல் 
மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த அவர் அவசரமாக முன்வர வேண்டும் என்றும் வேண்டுகின்றோம். இந்த விவாதத்திற்கு நாம் அவரை அழைப்பது எந்த ஒரு சவாலுக்காகவும் அல்ல. மாறாக மக்கள் பிழையாக வழி நடாத்தப்பட்டு விடக் கூடாது இவ்வாறான ஒரு சிலரின் கூற்றுக்களால் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்