பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக, 120க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த வெப்பத்தின் காரணமாக, மின்சாரத்தின் தேவை அதிகரித்து கராச்சியில் மின் பற்றாக்குறையும் நிலவுகிறது.
இந்த வெப்ப அலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என கராச்சியிலிருக்கும் ஜின்னா மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
"சனிக்கிழமையிலிருந்து கராச்சியில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்து மாகாணத்தின் பிற மூன்று மாவட்டங்களில் 8 பேர் இறந்து போயிருக்கிறார்கள்" என சிந்து மாகாண சுகாதாரத் துறைச் செயலர் சையது மாங்னியோ தெரிவித்திருக்கிறார்.
இந்த வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
திங்கட்கிழமையன்றும் கடுமையான வெப்பம் நீடிக்குமெனத் தெரிவித்திருக்கும் பாகிஸ்தானின் வானிலை ஆய்வுமையம், செவ்வாய்க்கிழமையிலிருந்து வெப்பம் குறைய ஆரம்பிக்கும் எனக் கூறியுள்ளது.
1979ஆம் ஆண்டில் பதிவான 117 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையே இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பநிலையாகும்.
கடந்த மாதம் இந்தியாவில் வெப்பத்தின் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 1,700 பேர் மரணமடைந்தனர்.