Advertisement

Main Ad

கற்பழிப்பு வழக்கில் 4 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை: இங்கிலாந்தில் அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்

இங்கிலாந்தில் சமீபத்தில் நான்கு வயது குழந்தை கற்பழிப்பு வழக்கில் விசாரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணைய ஆபாசமே குழந்தைகள் செய்யும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் பத்திரிக்கை ஒன்றில் வெளியான புள்ளி விவரங்களின்படி, பத்து வயதுக்கு கீழே உள்ள பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 33 போலீஸ் படைகளில் இருந்து கோரிக்கை மூலம் பெறப்பட்ட தகவலிலிருந்து  ஒன்பது வயது வரை உள்ள 776 குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்காக போலீசாரால் விசாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.  அங்குள்ள குற்றவியல் சட்டப்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மேல் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இந்த விசாரணை பட்டியலில் 4 வயது குழந்தையும் இருந்தது. இந்த குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

சிறுவர்கள் இணையத்தில் ஆபாசப் படம் பார்ப்பதைத் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று பிரபலமான மனநல ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் சிறார் பாலியல் குற்றங்களைத் தடுக்க இங்கிலாந்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.