காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு பொது பல சேனா உதவ வேண்டும் என்று ஸ்ரீலங்கா இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த் தெரிவித்தார்.
சுகததாச உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது :
கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளை ஒன்றிணைத்து ஜரோப்பிய தேசம் என்றும் முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்து அரபு தேசம் என்று அழைப்பதனை போல இந்து, பௌத்தர்கள் அதிகமாக வாழும் தென்கிழக்காசியாவை இந்து – பௌத்த தேசம் என்று அழைக்க வேண்டும்.
தமிழ் சமூகம் இலங்கையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங் கொடுத்தனர் மொகலாய சக்கரவர்த்திகளாலும் மேற்கத்தேயவாதிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டபோது, இலட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதுடன் மதமாற்றமும் செய்யப்பட்டனர். காலம் கடந்துள்ளபோதும் எமக்கெதிரான இந்த சவால்கள் மாறவில்லை.
பௌத்தமும் இந்து மதமும் ஒரே மண்ணிலிருந்து தோன்றின. பாரதத்தில் இருந்துதான் தோன்றின. இப்படியாக ஒரே தேசத்தில் இருந்து தோன்றியவர்கள் இன்று ஒருவரை ஒருவர் வெறுக்கின்றோம். ஆனால் அந்நிய தேசத்திலிருந்து அறிமுகப்படுத்திய கலாச்சாரத்தை ஞாபகத்தில் வைத்துள்ளோம். எனவே எமது நாட்டிலுள்ள இந்துக்கள் எம்மை ஆதரித்து ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள்.
கிழக்கு மாகாணத்தில் காரைத்தீவு விபுலானந்த சதுக்கத்திலே முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒல்லாந்தர் காலத்திலே தரைமட்டமாக்கப்பட்ட அம்மன் ஆலயம் இன்று மடு மாதா தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, மடு மாதா ஆலயத்தை மீட்டு மீண்டும் இந்துக்களிடம் ஒப்படைப்பாரா என்பதை கேட்க விரும்புகின்றேன். ஓவ்வொரு மாவட்டத்தையும் தனித்தனி மறை மாவட்டங்களாக மாற்றிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, மதமாற்றம் செய்வதை கைவிடுவாரா என்றும் கேட்கிறேன்.
இந்துக்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும் அரசியல் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து எமது தொண்டர்கள் பிரசாரம் செய்வார்கள் என்பதை நான் கூறிக்கொள்கின்றேன்.
எப்படி கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளை கூட்டாக ஒன்றிணைத்து ஜரோப்பிய தேசம் என்று அழைக்கப்படுகின்றதோ, முஸ்லிம் நாடுகளை ஒன்றினைத்து அரபு தேசம் என்று அழைக்கப்படுகின்றதோ அதனை போல, இந்து, பௌத்தர்கள் அதிகமாக வாழும் தென்கிழக்காசியாவை இந்து – பௌத்த தேசம் என்று அழைக்கவேண்டும் என நான் முன்மொழிகின்றேன.