Advertisement

Main Ad

சாய்ந்தமருது தோனாவில் குப்பை கொட்டியவர் மீது வழக்கு; பொலிஸ், சுகாதார பரிசோதகர்கள் இணைந்து அதிரடி!

சாய்ந்தமருது தோனா ஆற்றில் குப்பை கொட்டிய நபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

நீண்ட காலமாக சுத்தம் செயப்படாமல் குப்பை கூளங்களால் நிரம்பி வழிந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்த இத்தோனா கல்முனை மாநகர சபையினால் 13 இலட்சம் ரூபா செலவில் கடந்த இரு வார காலமாக சுத்தம் செய்யப்பட்டு- ஆழமாக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று புதன்கிழமை இரவு நபர் ஒருவர் குப்பை கூளங்கள் அடங்கிய பொதியொன்றை இத்தோனாவின் ஓரத்தில் வீசிச் சென்றுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை இப்பொதியை அவதானித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், அதனை சோதனைக்குட்படுத்திய போது அதனுள் மின் கட்டணப் பட்டியல் (Light Bill) ஒன்று இருப்பது கண்டறியப்பட்டு அதன் மூலம் குறித்த நபர் சாய்ந்தமருது ஹிஜ்ரா வீதியைச் சேர்ந்தவர் எனக் கண்டு பிடிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரித்ததுடன் அவருக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக சுத்தம் செயப்படாமல் குப்பை கூளங்கள் மற்றும் சல்பீநியாத் தாவரங்களினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட இத்தோனாவின் அசாதாரண நிலை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பும் இருந்தது.

இதனைக் கருத்திற் கொண்டு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியாப்பர் விடுத்த வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேற்கொண்ட முயற்சி காரணமாக கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜெசூரின் ஏற்பாட்டில் அத்திணைக்களம் இத்தோனாவை சுத்தம் செய்து ஆழமாக்கும் திட்டத்திற்காக 13 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
IMG_0113