இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம். ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யாவை (குர்பானி) நிறைவேற்றுகின்றபோது நாட்டின் நிலவரங்கள், நாம் வாழுகின்ற சூழல் என்பவற்றைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயம். உழ்ஹிய்யா தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்குகின்ற மார்க்க சட்ட திட்டங்கள் மற்றும் பொதுவான வழிகாட்டல்களுக்கேற்ப முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா வினயமாக வேண்டிக் கொள்கிறது.
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
குறிப்பாக உழ்ஹிய்யாவை நாட்டின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கமைய நிறைவேற்ற வேண்டும்.
உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை கொள்வனவு செய்யும்போதும் அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போதும் உரிய அத்தாட்சிப் பத்திரங்களைப் பெற்றிருத்தல், மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்துதல், வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவுக்கேற்ப பிராணிகளை வாகனத்தில் ஏற்றுதல், உழ்ஹிய்யாவுக்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை தீர்மானித்துக் கொள்ளுதல், குர்பான் தொடர்பான விளம்பரங்களை பொது ஊடகங்களில் பிரசுரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளல், அவ்வப் பிரதேச நிலவரங்களைக் கவனத்திற் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெற்று தனியாகவோ அல்லது கூட்டாகவோ உழ்ஹிய்யாவை நிறைவேற்றுதல், குர்பான் செய்யப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை பொறுப்புணர்வுடன், உரிய முறையில் புதைப்பது முதலான விடயங்களில் முஸ்லிம் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
குறிப்பாக பல்லினங்களோடு வாழும் நாம், பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படப்படும் வகையிலோ நடந்து கொள்ளவே கூடாது. போயா தினத்தன்று அறுப்பு செய்வதை முற்றாக தவிர்ந்து கொள்வதும் பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யாவை முறையாக நிறைவேற்றுவதும் மிகவும் அவசியமாகும்.
முஸ்லிம் சமூகம் தொடர்ந்தேச்சியாக பல்வேறு சவால்களை, தாக்குதல்களை எதிர்நோக்கி வந்தபோதிலும் தற்போது ஓரளவு தணிந்திருக்கின்ற நிலையில், இந்த ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட இருக்கின்றோம்.
எனவே, சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் சிலர் எமது உழ்ஹிய்யா நடவடிக்கைகளை கூர்ந்து அவதானிக்கக் கூடும். அத்தகையோருக்கு சந்தர்ப்பம் அளித்து விடாமல் மிகக் கவனமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்வது எமது கடமையாகும்.
என்.எம். அமீன்
தலைவர்
முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா
0 Comments