Advertisement

Main Ad

அலியார் ஹஸரத்தின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு



இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகருமான ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் (தேவ்பந்தி) மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பாகும் என  புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரங்கல் தெரிவித்தார்.

பெரியார் ஹஸரத் என எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்பட்ட அலியார் ஹஸரத் இன்று சனிக்கிழமை வபாத்தானார்கள். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

“மிக நீண்ட காலமாக மகத்தான சன்மார்க்கப் பணியில் தன்னை ஈடுபத்திக் கொண்டு முஸ்லிம் சமூகத்துக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ள அன்புக்குரிய பெரியார் ஹஸரத்தின் மறைவு செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தேன். அவரது இழப்பால் வாடுகின்ற அவரது குடும்பத்தினர், மாணவர்கள், சம்மாந்துறை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சம்மாந்துறை மண்ணை சமூக ரீதியாகவும் சன்மார்க்க ரீதியாகவும் தலைநிமிரச் செய்ததில் பெரியார் ஹஸரத்துக்கு பெரும் பங்குள்ளது. குறிப்பாக தப்லீக் ஜமாஅத்தின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கிழக்கு மாகாணத்தில் தப்லீக் ஜமாஅத் வளர்ச்சியடைய பெரும்பாடுபட்ட ஒருவர்.

சிரமங்களுக்கும் மத்தியிலும் சம்மாந்துறையில் தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியை நிறுவி சன்மார்க்கப் பணியில் அரும் பெரும் சேவையாற்றியுள்ளார். அரசியல் தலைமைத்துவங்களுடன் எப்போதும் நெறுக்கமான உறவைப் பேணிய அவர், அதன் ஊடாக சமூகத்தின் ஒற்றுமை – அபிவிருத்திக்கு அதிக பங்களிப்பு செய்துள்ளார்.

விசேடமாக யுத்த காலத்தில் இராணுவத்துடன் ஏனைய தரப்புடன் பேச்சுக்களை நடத்தி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர் முன்னணியில் இருந்து செயற்பட்டதை எவராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. அவரது இறப்பால் கவலையடைந்துள்ள சம்மாந்துறை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments