(எஸ்.அஷ்ரப்கான்)

மாகாணசபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்ட  மூல வரைபு, '20 வது அரசியலமைப்புத் திருத்தம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கின்றது இது மாகாண சபைகளை மத்திய அரசு அடக்கியாளும் நிலையை வெளிப்படுத்துகிறது என குற்றம்சாட்டியுள்ளார் நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவரும் பொறியியலாளரும் அரசியல் விமர்சகருமான உதுமாங்கண்டு நாபீர்,

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

மாகாணங்களின் ஆயுட்காலம் நிறைவுக்கு வரும் நிலையில் முதலாவதாக ஆயுட்காலம் முடிவடையும் 3 சபைகளுக்கு உடனடியாக தேர்தலொன்றை நடாத்த வேண்டிய தேவையுள்ளது. அதனைச்செய்து முடிப்பதில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் கொள்கை அடிப்படையில் உறுதியாகவே இருந்து வருகின்றது.  என்றாலும் அரசாங்கம் அத்தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் சிறந்ததாக தெரியவில்லை.இதனால் நாபீர் பௌண்டேசன் கண்டிப்பதுடன் காலம் முடிந்தவுடன் தேர்தல் நடத்தப்படுவதே நல்லாட்சிக்கு சிறந்த முன்மாதிரியாகும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.

அதேபோன்றுதான் 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் பறிபோவதை நாபீர் பௌண்டேசன் ஒருபோதும் ஆதரிக்காது.

13வது திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் முதலமைச்சரின் உத்தரவின் பேரில்தான் ஆளுணர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் 20வது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் இதுவரை மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாகாண சபைகளை கலைப்பதற்கான உத்தரவுப் பரிந்துரை இல்லாமல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பாராளுமன்றத்திற்கு இவ்வதிகாரம் பறிபோகும் நிலைமை ஏற்படவுள்ளது. இதனை முஸ்லிம் தலைமைகள் ஒருமித்துத் தடுக்க முன்வரவேண்டும் என்றும் நாபீர் பெண்டேசன் கேட்டுக்கொள்கின்றது

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் பறிகொடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு நாம் ஒரு போதும் துணைபோக முடியாது. இது விடயமாக தேசிய ரீதியான முன்னெடுப்புக்களை எடுத்து முஸ்லிம் சமுகத்திற்கு ஏற்படப்போகும் இதனுாடான ஆபத்திலிருந்து தடுப்பதற்காக உறுதியுடன் ஒற்றுமையாக செயற்பட  வேண்டும் என கேட்டுக்கொள்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.