புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், தனது இறுதி விருப்பமாக மருத்துவமனை படுக்கையில் வைத்து தனது வாழ்க்கைத் துணையை திருமணம் செய்த சம்பவம் அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.
கெய்த் போரம் என்ற நபரே கடந்த 3 வருட காலமாக தன்னுடன் திருமணம் செய்யாது வாழ்ந்த தனது வாழ்க்கைத் துணையான நினா ஸ்கொட்டை மேற்கு இஸ்லிப் பிராந்தியத்திலுள்ள குட் சமாரியன் மருத்துவமனையில் திருமணம் செய்துள்ளார்.
கடந்த ஒன்றரை வருட காலமாக புற்றுநோயுடன் போராடி வரும் அவர், மேலும் அதிக காலம் உயிர் வாழ்வது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்தே அவர் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை நினாவிடம் வெளியிட்டுள்ளார்.
இந்த திருமண வைபவத்திற்கு தேவையான திருமண மோதிரங்கள், கேக் என்பவற்றை வாங்குவதற்கும் இதர செலவுகளுக்குமான பணம் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களாலேயே சேகரித்து வழங்கப்பட்டுள்ளது.
