(ஜெஸ்மி எம்.மூஸா)

முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ள நிலையில் அக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தலைமையுடன் அடிக்கடி முரண்பட்டுக் கொண்டு பல்வேறு விமர்சனங்களையும் வெளியிட்டு வந்த தவிசாளர் பஸீரின் பெயரும் இடம்பெற்றுள்ளமை அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தைத் தந்துள்ளது
தான் முன்வைக்கும் கோரிக்கைகளுக்குக் கட்சித் தலைமை இணங்கா விட்டால் தான் மாற்று வழிகளைக் கையாள வேண்டிவரும் என அறிவித்த பஸீரை கட்சித் தலைமை உள்வாங்கி இருப்பது தற்போதைய பேசுபொருளாக உள்ளது
அடுத்த பாராளுமன்றத்திலும் தானே எம்.பி என அடித்துக் கூறிய பஸீரின் பேச்சுக்கள் உண்மையாக்கப்பட்டுள்ளதுடன் தலைவர் வகுத்துள்ள வியூகம் பஸீரை எம்.பி யாக்க உதவியுமுள்ளது என சிலாகிக்கப்படுகிறது
ஏறாவூரிலும் தமிழ்ப் பிரதேசங்களிலும் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் கனவான் அரசியலாளருமான அலி சாஹிர் மௌலானா- காத்தான்குடியைத் தளமாகக் கொண்ட பொறியியலாளர் றஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி- சமூகக் குரலுக்காக ஹிஸ்புல்லாவிடமிருந்து பிரிந்த மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்- கல்குடாவின் கல்விமானும் கணக்காளருமான றியாள் ஆகியோரை மரச்சின்னத்தில் போட்டியிட வைத்து மரச்சின்னத்தில் முகா வுக்கு வாக்குகளைப் பெற்று பஸீரை எம்.பி யாக்குவதே தலைவரின் திட்டமாக இருக்கலாம் என குசு குசுக்கப்படுகின்றது
ஏற்கனவே தனது சொந்த ஊரான ஏறாவூரிலும் மட்டு தமிழ் பிரதேசங்கள்- காத்தான்குடி- கல்குடா ஆகியவற்றில் கணிசமானளவு விருப்பு வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படும் பஸீர் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர்- முன்னாள் அமைச்சர் என்கின்ற அந்தஸ்துக்களையும் கொண்டிருப்பதால் அவருக்கே விருப்பு வாக்குக் கிடைத்து அவர் எம்.பி ஆவார் என்ற அபரீத நம்பிக்கை தலைவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்று பேசப்படுகிறது
முஸ்லிம் காங்கிரஸின் முள்ளந் தண்டாக இவர் மட்டுமே போட்டியிடுவதால் அடிமட்ட போராளிகளிடம் இதனை வைத்து பரப்புரை செய்தால் வெல்ல வைக்கலாம் என்ற தலைவரின் திட்டம் அம்பலமாகியுள்ளதாக அறியமுடிகிறது
இவ்வியூகத்தில் சறுக்கல் ஏற்பட்டால் தேசியப்பட்டியலில் இடமளிப்பது என்ற முடிவும் எட்டப்பட்டு விட்டதாக தெரியவருகிறது. துலைமைத்துவ நெருக்கு வாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தலைமைத்துவம் எடுத்துள்ள இச்சாணக்கிய முயற்சி போராளிகளுக்குள்ளும் உயர் சிந்தனையாளர்களுக்குள்ளும் எவ்வாறான விமர்சனத்தைக் கொண்டு வரப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
முகா வினை தலைவரின் அனுமதியின்றி விமர்சித்த- முடிவெடுத்த பலர் மிக வேகமாக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு வந்துள்ள நிலையில் அதீத விமர்சனங்களை தாராளமாக அள்ளிச் சொரிந்து வந்த பஸீருக்கு ஏன் மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு வருகின்றது என்ற நியாயமான போராளியின் கேள்விக்கு விடை எப்போது கிடைக்கும்?;??
