‘டெல்லி உயிரியல் பூங்கா’வில் வெள்ளைப் புலி தாக்கியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் உயிரியல் பூங்காவைப் பார்வையிட சென்ற மாணவர் ஒருவர், வெள்ளைப் புலியைப் பார்த்த உற்சாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கூச்சலிட்டுள்ளார். புலியைப் பார்த்து உரத்த குரலில் கத்தியுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரைத் தாண்டி புலி இருந்த பகுதிக்குள் போய் வீழ்ந்துள்ளார்.
இது தொடர்பில் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதோடு, உடன் வந்த மாணவர்கள் குறித்த மாணவனை காப்பாற்ற முயற்சித்தபோதும் பயனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தகவலறிந்து பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள், மாணவனை புலி கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அம்மாணவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ‘வெள்ளைப் புலி அடைக்கப் பட்டிருந்த இடத்தின் பாதுகாப்புச் சுவரின் உயரம் குறைவாக இருந்ததே இந்த விபரீதத்திற்குக் காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.