(எம்.வை.அமீர், ஹாசிப் யாஸீன்)
அளுத்கம, தர்ஹா நகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில்
பொதுபல சேனா மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது
கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறித்தாக்குதலைக் கண்டித்தும் மற்றும் எதிர்கால
நடவடிக்கைகள் தொடர்பிலும் கல்முனையில் நாளை (25) புதன்கிழமை நடாத்த
திட்டமிட்டிருந்த துஆப் பிரார்த்தனை மற்றும் கண்டனப் பேரணி என்பன பொலிஸ்மா
அதிபரினால் நீதிமன்ற தடை உத்தரவின் மூலம் தடுத்தமை சம்பந்தமாக திகாமடுல்ல
மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.
ஹரீஸ் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை
(24) பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை
பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா
மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எம்.ஏ. ஜின்னா உட்பட
ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அதிதீவிர போக்கைக்கொண்ட பொதுபல சேனா போன்ற அமைப்புக்களின் வருகையைத்
தொடர்ந்து மிகவும் ஐக்கியமாக வாழ்ந்த சிங்கள மக்களிடம் முஸ்லிம்கள்
தொடர்பான பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான விடயங்களை கூறி அவர்களை அப்பாவி
முஸ்லிம்களுடன் மோத வைக்கின்ற கைங்கரியம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இதன் காரணமாக இங்கு வாழும் முஸ்லிம்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து
கொண்டிருக்கின்றார்கள். இதன் தொடராக தம்புள்ள தொடக்கம் அளுத்கம, தர்ஹாநகர்,
பேருவளை மற்றும் பெலிப்பன்னை மற்றும் ஏனைய இடங்களில் வர்த்தக நிலையங்கள்
தாக்கப்பட்டு அங்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன்
உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான அச்சநிலையை போக்க முஸ்லிம்
அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு
அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
முஸ்லிம்களிலிருந்து ஐயாயிரம் முஸ்லிம் பொலிஸாரை நியமித்து முஸ்லிம்
பிரதேசங்களை பாதுகாக்கவேண்டும். இவ்வாறு பொலிஸாரை நியமித்து சிங்கள
பெரும்பான்மை பொலிஸாருடன் இணைத்து கடமையில் ஈடுபடுத்துவதன் ஊடாக
பெரும்பான்மையினரின் மீதுள்ள சந்தேகத்தை முஸ்லிம்கள் போக்கி சுமுகமாக வாழ
வழிசமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபல
சேனா தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட
இனவெறித்தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்
ஹக்கீம் உள்ளிட்ட குழுவில் தான் உட்பட அதிகாலையே குறித்த பிரதேசங்களுக்கு
விஜயம் செய்தோம்.அங்குள்ள நிலைமைகளை நேரடியாகக் கண்டபோது எங்களை அறியாமலேயே
கண்கள் களங்கியது.
அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொலிஸார்
மற்றும் இராணுவத்தினர் முன்னிலையிலேயே கொடூரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,
குறித்த பிரதேச மக்களின் பொருளாதாரத்தை நசுக்கும் தீவிரவாதிகளின் ஒரு
முன்னெடுப்பாகவே தான் இதனை பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரின் கண்ணும்
மனமும் உருகிய நிலையில் கருத்துக்களை வெளியிட்டார்.
அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை சம்பவங்களிலும் தம்புள்ள
பள்ளிவாசல் தாக்குதல் தொடக்கம் இன்றுவரை இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான
எல்லா தாக்குதல்களின் பின்புலத்தில் பொதுபல சேனா மற்றும் சிங்கள தீவிர
அமைப்புக்கள இருப்பதை முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகவும்
முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் பல்வேறுபட்ட நகர்வுகளை
செய்துவருவதாகவும் இதன் ஒரு கட்டமாக முஸ்லிம்களின் பாதுகாப்பை வலியுறுத்தி
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு அரசுக்கு முக்கியத்துவம்
மிக்க பிரரேணை ஒன்றுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்காது
விட்டதாகவும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு முஸ்லிம்
நாடுககளின் பிரதிநிதிகளை தெளிவு படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.
வன்செயல்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்தபோது ஊரடங்க சட்டத்தை பிறப்பித்து
முஸ்லிம்களை மட்டும் வீடுகளுக்குள் முடக்கிவிட்டும், காடுகளுக்குள்
துரத்திவிட்டு தீவைப்பு மற்றும் கொள்ளையடிப்பு நிகழ்வுகளை
நிகழ்த்தியுள்ளனா்.
பொதுபல சேனாவின் இவ்வாறான காடைத்தனங்களை முஸ்லிம் காங்கிரஸ் மிகக் காட்டமாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பானது பயங்கரவாத பொலிஸாக சட்டத்தைக் கையில்
எடுத்துக்கொண்டு நாட்டில் முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்துகொண்டு
அதனுடாக கிடைக்கும் தீவிர போக்குக் கொண்ட சிங்கள மக்களின் ஆதரவை பெற்று
அரசாங்கத்தை தடுமாற வைக்க முற்படுவதாகவும் குறித்த பொதுபல சேனாவின்
செயற்பாட்டுக்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்தின் கைகளும் இருப்பதாகவும்
தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி, முஸ்லிம்கள்
காத்தான்குடியில் பள்ளிவாசலில் சுடப்பட்டு கொல்லப்பட்டபோதும்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபோதும் ஹர்த்தால், ஆா்ப்பாட்டங்களை
அனுஷ்ட்டிக்காத்தவர்கள் தற்போது அளுத்கம விடயத்தில் ஹர்த்தால்,
ஆா்ப்பாட்டங்களை நடாத்துகின்றார்கள் என தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்ள
முடியாது.
முஸ்லிம்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்ட போதெல்லாம் தங்களது எதிர்ப்பை
சாத்வீக ரீதியில் கறுப்பு வெள்ளி போன்ற பல்வேறுபட்ட நிலைகளில்
வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
தான் ஒரு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும்
பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக பார்த்தமட்டில் உடனடியாக சாத்வீக
போராட்டத்துக்கு மக்களை அழைத்ததாகவும் அதன் எதிரொலியாக கல்முனை சம்மாந்துறை
அட்டாளைச்சேனை உட்பட நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் எல்லாப்
பிரதேசங்களிலும் ஹர்த்தாலும் கடையடைப்புக்களும் இடம்பெற்றன.
தற்போது எழுந்துள்ள தேவை குறித்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வராது,
ஏனைய பிரதேசங்களை பாதுகாப்பது என்றால் முஸ்லிம்களது ஒற்றுமையை இந்த
நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது.
பாரிய அகிம்சை போராட்டம் ஒன்றை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறை
மாவட்டத்தில் திங்கட்கிழமை நடாத்த திட்டமிட்டிருந்ததாகவும் அரசாங்கத்தில்
அங்கம் வகிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பொலிஸாரின்
அனுமதியுடன் குறித்த அகிம்சைப் போராட்டத்தை கல்முனைக்குடி முகைதீன் ஜும்மா
பள்ளிவாசலுக்கு முன்னால் நடாத்த இருந்ததாகவும் அதற்கு செவ்வாய்க்கிழமை
நடாத்த பொலிஸார் தரப்பில் அனுமதி கிடைத்த போதும் பின்னர் அரச புலனாய்வு
பிரிவின் தூண்டுதலால் அதுவும் தடுக்கப்பட்டுள்ளது.
இதனையெடுத்து புதன்கிழமை நடாத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில்
பொலிஸ்மா அதிபரின் தூண்டுதலின் காரணமாக அதற்கு நீதிமன்ற தடை உத்தரவின்
மூலம் தடுத்துள்ளனா் என தெரிவித்தார்.
கண்டியில் பொதுபல சேனாவின் ஒன்றுகூடலுக்கு அனுமதியளித்துள்ள பொலிஸ்மா
அதிபர் மக்கள் பிரதிநிதியான என்னுடைய துஆப் பிரார்த்தனையுடன் கூடிய
நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதையிட்டு வேதனையடைவதுடன் அவரது பக்கச்சார்பான
இச்செயற்பாட்டை வண்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
இருந்த போதும் பொலிஸ்மா அதிபரின் இவ்வாறான போக்கை கருத்தில்கொண்டு
பின்வாங்கப்போவதில்லை இன்னும் ஓரிரு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள
புத்திஜீவிகள், இளைஞர்கள், பெரியவர்களை ஏதோ ஒரு அமைப்பில் சந்தித்து
எதிர்காலத்தில் சமூகத்தை பாதுகாக்கும் விடயத்தில் எங்களது பங்கு எவ்வாறு
இருக்கவேண்டும் என்பது சம்மந்தமாக தெளிவுபடுத்த இருக்கின்றேன் என்றும்
கூறினார்.
முஸ்லிம்களின் அமைதியின்மையை போக்க அரசுடன் இருக்கின்ற பாராளுமன்ற
உறுப்பினர்களின் அழுத்தங்கள் போதாமல் இருப்பதாக தெரிவித்த பாராளுமன்ற
உறுப்பினர் விரைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
